பக்கம்:ஒரு மாணவன் மகாத்மாவாகிறான்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20


மிடமெல்லாம் இயற்கையின் அழகு மெருகேற்றப்பட்டு, சூரிய ஒளியில் பளிச்சிட்டு மின்னின. செப்டம்பர் மாதத்தின் நண் பகல் நேரம்; அன்று ஞாயிற்றுக்கிழமை.

ராஜு, ரமேஷ், மூர்த்தி, கணபதி, இன்னும் சில நண்பர்களும் காரசாரமாக எதைப் பற்றியோ பேசியபடி, மெயின் ரோடையும், சிறிய சந்துகளையும் கடந்து ஒரு தென்னந் தோப்பிற்குள் நுழைந்தார்கள்.

கோடையின் வெப்பத்திற்குப் பந்தல் போட்டது போல் வானத்தை மறைத்துக் கொண்டு அடர்ந்து நெருங்கி வளர்ந்திருந்தன மரங்கள். அவற்றின் கிளைகளையும் பரந்து விரிந்த இலைகளையும் துளைத்துக் கொண்டு, கதிரவனின் ஒளி தரையில், தங்க நாணயங்களை வாரி இரைத்தாற்போல் மின்னின.

தோட்டத்தின் மத்தியிலிருந்த ஒரு கிணற்றங் கரையை அடுத்து, உட்காருவதற்கு ஏற்றதாயிருந்த ஒரு இடத்தைத் தேடிப்பிடித்துக் கொண்டு அனைவரும் அமர்ந்தனர்.

சிறிது நேரம், அவர்களில் யாரும் ஒருவருக்கொருவர் ஏதும் பேசிக் கொள்ளாமலே நேரம் மெளனத்தில் கரைந்தது.

அந்த மெளனத்தைக் கலைக்கத்தானோ, அல்லது உண்மையிலேயே நீண்ட தூரம் நடந்து வந்த களைப்பின் தாகத்தினால் தானோ என்னமோ, சட்டென்று எழுந்த கணபதி, "நான் கிணற்றிலிருந்து தண்ணிர் இறைத்துக் குடிக்கப் போகிறேன். உங்களுக்கும் வேண்டுமா?" என்று கேட்டான்.

"நீ இப்போது எங்கும் எழுந்து போக வேண்டாம், கொஞ்சம் போகட்டும் உட்காரு," என்று அவன் கையைப்