பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 ஒரு வீட்டின் கதை வல்லிக்கண்ணன் திரிந்து பொழுது போக்க வாய்ப்பு கிட்டும். ஆனால், எட்டு மணி ரயிலைப் பிடிக்க, ஏழு மணிக்கே ஊரிலிருந்து கிளம்பி நடந்துபோக வேண்டும். ஐந்தரை, ஆறு மணிக்கே எழுந்து எல்லா வேலைகளையும் கவனிக்க வேண்டும். மாலையில் ஆறு மணிக்குத்தான் ரயில். அதில் வந்து இறங்கி, பையன்கள் மெதுவாக நடந்து வருவார்கள். வீடு வந்து சேர்வதற்குள் இருட்டிவிடும். வந்தவுடன் சாப்பிட்டு விட்டு, படுக்கலாம் என்றுதான் தோன்றும் வெயிலுக்கு. படிப்பதற்கு உற்சாகம் இருக்காது. மழை நாட்களில் சிரமங்கள் அதிகம். எனினும் தினசரி பல பையன்களோடும் சேர்ந்து ரயிலில் போய் வருவது மனோகரமாக இருந்தது அவனுக்கு நகரத்தில் சுற்றித் திரிந்து பொழுது போக்குவது ஜாலியாக இருந்தது. சில மாதங்களுக்கு ஒருமுறை நகரத்தில் நாடகக் கம்பெனி ஏதாவது வந்து முகாமிடும். பையன்களுக்கு நாடகம் கவர்ச்சி சக்தியாக விளங்கியது. நாடகங்களைப் பற்றியும், நாடகத்தில் நடிக்கிறவர்களைப் பற்றியும், முக்கியமாக நாடகக்காரிகள் பற்றியும் பேசுவது இன்பமான விஷயமாக அமைந்தது. பெரிய பையன்கள் நகரத்தில் இருந்த சில தெருக்களைப் பற்றி அங்கே அந்தி மந்தாரைகளாய் பூத்தொளிரும் தனிரகமான பொம்பிளைகளைப் பற்றி சுவையாகப் பேசினார்கள். ஒன்றிரண்டு பையன்கள் அதுமாதிரி வீடுகளுக்குப் போய் வந்து அனுபவம் பெற்றிருப்பதாகக்கூட அளந்தார்கள். வளர்ந்து கொண்டிருந்த வெயிலுக்கு அப்படி அனுபவம் பெற வேண்டும் என்ற ஆசை துடித்தது. ஆனால் செயல்புரியத் துணிச்சல் இல்லை. பதினைந்து வயதாகியும், அவன் எட்டாவது வகுப்பிலேயே மட்டம் போட்டு விட்டதால், படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டான். "ராசா படிச்சு என்ன ஆகப்போகுது? இருக்கிற சொத்துக்களை மேல்பார்த்துக்கிட்டு இருந்தாலே போதுமே!" என்று அம்மாக்காரி பெருமையாகச் சொன்னாள். பையன் சீட்டாடுவதிலும், வம்பளப்பதிலும், நாடகங்கள் பார்க்கப் போவதிலும் அக்கறை காட்டினான். பூனைக்கராப்பெட்டி (பிற்காலத்தில் கிராமபோன் என்று பெயர் பெற்றுவிட்ட போனகிராப்' பெட்டி) வாங்கினான்.