பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

101 ※ஒரு வீட்டின் கதை

வல்லிக்கண்ணன்


'ஊமத்தம்பூக் குழாய்' வைத்த அழகான பெட்டி. அதில் இசைத் தட்டு சங்கீதம் கேட்டு மகிழ்வதற்காக எப்போதும் ஒரு கூட்டம் கூடியது. ஆகவே, ஒத்தை வீடு கலகலப்பாகவே இருந்தது.

வீட்டின் சுவர்கள் வெறுமையாய்க் கிடப்பது வெயிலுக்குப் பிடிக்கவில்லை. படங்கள் வாங்கி மாட்டினான்.

இந்தியர்கள் தெய்வங்கள் என்று போற்றி, பூமாலை போட்டு, சூடன் கொளுத்தி, பூசை பண்ணிக் கும்பிடுவதற்குப் பயன்பட்ட ரவிவர்மாவின் லட்சுமி, சரஸ்வதி, பூதேவி சீதேவி சமேதரான ஸ்ரீமந் நாராயணன், பார்வதி பரமேஸ்வரன், பிள்ளையார் முதலிய படங்கள் பலவும் பல வர்ணங்களில் வசீகமாக ஜெர்மனியில் அச்சிடப்பெற்று வந்து, கண்ணாடி சட்டம் போடப் பெற்று, தெருத்தெருவாக விற்பனை செய்யப்பட்டன. அவற்றை வாங்கிச் சுவர்களில் மாட்டி வைத்தான் வெயிலு. மோகினி, ஊஞ்சல் சுந்தரி, பந்து பயிலும் அழகி, லிகிதம் எழுதும் சகுந்தலை, அசோக வனத்துச் சீதை போன்ற இதர ரவிவர்மா சித்திரங்களையும் (ஜெர்மானியத் தயாரிப்புகள்) வாங்கி எடுப்பான இடங்களில் மாட்டி வைத்தான். மதுரையிலிருந்து அழகான சுவர்க்கடியாரம் ஒன்று வாங்கி வந்து, எல்லோர் பார்வையிலும் படக்கூடிய இடத்தில் மாட்டினான்.

இப்படி எல்லாம் வீட்டை அழகு படுத்துவதில் ஆர்வம் காட்டிய வெயிலு தன்னை சிங்காரித்துக் கொள்வதிலும் அக்கறை எடுத்துக் கொண்டான்.

அந்நாட்களில் பிரபலமாக இருந்த - வாங்கிக் கட்டுவது அந்தஸ்தின் சின்னம் என்றும், நாகரீகம் என்றும் மதிக்கப்பட்டு வந்த - லங்காஷயர் மில் தயாரிப்பான, மிக நைஸான, மல் வேட்டிகளை அவனும் வாங்கிக் கட்டினான். ப்யூஜி ஸில்க் சட்டைகள் அணிந்தான். 'க்ரமென்ட்ஸ் கோல்ட் பட்டன்ஸ்' என்று பெரிதாகப் பேசப்பெற்ற தங்கப் பித்தான்களையே சட்டைகளுக்குப் பயன்படுத்தினான். பாதங்களில் விலை உயர்ந்த ஸ்லிப்பர் அணிந்து திரிந்தான்.

வில் வண்டியை அழகு படுத்தினான். நல்ல விலையில் உயர்ந்த ஜாதி மாடுகளையே வாங்கினான். அடிக்கடி 'மாட்டுத்தாவணி'யில் அவற்றை மாற்றி மகிழ்ந்தான். 'டவுனுக்குப் போய்