பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

125 ஒரு வீட்டின் கதை வல்லிக்கண்ணன் கல்யாணமாகி, விதவையுமாகி, அம்மாவுக்கு ஒத்தாசையாகப் பிறந்த வீட்டோடு வந்துவிட்டாள். மற்ற மூன்று பேருக்கும் இனிமேல்தான் கல்யாணம் நடக்க வேண்டும். அந்தக் குடும்பம் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கி வந்தது. மூன்று எருமை மாடுகள் நின்றன. பர்வதம் பால் வியாபாரம் பண்ணிவந்தாள். மோர், நெய் விற்பனையும் உண்டு. அந்த வீட்டில் ஆடுகள் வளர்ந்தன. கோழிகள் வளர்க்கப்பட்டன. கோழிகள் வீட்டுக்குள் நெடுகிலும் தாராளமாய் திரிந்து, எல்லா இடங்களையும் அகத்தப்படுத்திக் கொண்டிருந்தன. தோசைக்கு மாவு அரைக்க முடியாத வீட்டுக்காரர்களுக்காக காசு வாங்கிக்கொண்டு இந்த வீட்டில் மாவு ஆட்டிக் கொடுத்தார்கள். தோசைமாவு அரைக்கப்படாத சமயங்களிலும் ஆட்டுரலுக்கு வேலை இருந்தது. கழிவுத் தாள்களை தண்ணீரில் வெந்தயத்துடன் ஊற வைத்து, மறுநாள் ஆட்டுரலில் போட்டு அரை அரை என்று அரைத்துக் கூழாக்கி, கூடைகள் பெட்டிகள் கொட்டான்கள் என்று ஏதேனும் செய்து வைப்பார்கள். இதனால் எல்லாம் ஆட்டுரல் ரொம்ப தேஞ்சு போச்சு என்று சிவகுருநாதன் மனைவி கூப்பாடு போட்டது உண்டு. அது பிற்காலத்தில் நிகழ்ந்த விஷயம். அந்தக் குடும்பம் ஒத்தை வீட்டில் தங்கள் சுக செளகரியங்களுக்கு ஏற்பக் காரியங்கள் செய்து கொண்டிருந்தது. ஒத்தை வீட்டின் தெற்கு மூலையில், வீட்டுக்குள்ளேயே வெளிச்சுவர்களை ஒட்டி, ஒரு கிணறு இருந்தது. கிணற்றினுள் இறங்குவதற்கு வாகாக, கால்களை அங்கங்கே ஊன்றிக் கொள்ள வசதியாக, எட்டத்தில் எட்டத்தில் கற்கள் சுவர்களில் பதிக்கப் பட்டிருந்தன. கிணற்றுக்கு மேலே காம்பவுண்டுச் சுவர் சுமார் ஐந்தடி உயரத்துக்குக் கட்டப்பட்டிருந்தது. உயரே திறந்த வானவெளிதான். ஒரு இரவு. நிலவு மங்கலாக ஒளிர்ந்தது. எட்டு, எட்டரை மணி இருக்கலாம். கிணற்றுப் பக்கம் வந்த பர்வதம் எட்டிப் பார்த்தாள். சுவரோடு சுவராக ஒட்டிக் கொண்டு ஒரு ஆள் நிற்பது தெரிந்தது. ஆள் தான். கறுப்பாய், தடிக்கட்டை மாதிரி. மேலே ஒன்றுமில்லை. இடுப்பில் வேஷ்டி வெள்ளையாய் பளிச்சிட்டது. எவனோ திருட்டுக் கழுதை, திருடிட்டுப் போக வந்து, பதுங்கியிருக்கான் என்று அவள் மனம் சொன்னது.