பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 ஒரு வீட்டின் கதை வல்லிக்கண்ணன் ஈடுபடுகிறார்கள். காட்டுமிராண்டிகளின் பாஷை முதல் பண்பாடு பெற்ற மக்களின் வாழ்க்கையில் பகிரங்கமாகவும் மறைவாகவும் உலவுகிற கெட்ட வார்த்தைகள் ஈறாக அனைத்து விஷயங்களையும் இன்ட்டெலக்சுவல்ஸ் ஆய்வு செய்து பக்கம் பக்கமாக திஸிஸ் எழுதித் தள்ளுகிறார்கள். இவற்றால் எல்லாம் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் ஏதாவது பயன் உண்டா என்பதை எந்த அறிவு ஜீவியும் தனது ஆய்வுக்குரிய விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லை! இப்படி ஆய்வில் ஈடுபடுகிற அறிவு ஜீவிகளுக்கு தாராளமாகப் பணம் கிடைக்கிறது. ஜாலியாகப் பலப்பல இடங்களுக்கும் பயணம் போய் வர முடிகிறது. உடம்பிலே பிடிக்காமல் வாழ்க்கையை ஒட்டவும் முடிகிறது. பட்டங்கள் பெறவும் முடிகிறது. இந்த விதமாக ஆய்வு நடத்திக்கொண்டு உலக நாடுகளைச் சுற்றிக் கொண்டிருக்கிற உற்சாகிகளில் ஒருவன்தான் ஆல்பர்ட், ஏதோ ஒரு ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்தவன். தெற்கு ஜில்லாக்களின் சிற்றுார்களின் வளர்ச்சி தேய்வுகளையும், தமிழ் நாட்டு மக்களின் பழக்க வழக்க மாறுதல்களையும் பண்பாட்டுப் பாதுகாப்புகளையும், சிதைவுகளையும், பல்வேறு ஜாதியினரின் சடங்குகள் ஐதீகங்களையும் ஸ்டடி பண்ணுவதாகச் சொல்லி ஊர்ஊராகப் போனான். கிழவர்கள், கிழவிகள், கல்யாணமானவர்கள், ஆகாதவர்கள், பெரியவர்கள், சின்னவர்கள் என்று பல ரகமானவர்களையும் சந்தித்துப் பேசினான். டேப் ரிக்கார்டரில் பதிவு செய்தான். போட்டோக்களும் எடுத்துக் கொண்டான். காசுகளைப் பற்றியும் காலத்தைப் பற்றியும் அவன் கவலைப்படவில்லை. அவனுக்கு தமிழ் பேசத் தெரிந்திருந்தது. அவன் தமிழ் பேசியது மற்றவர்களுக்கு விசித்திரமாக ஒலித்தது. தனக்குத் துணையாக, வேலையில்லாத பட்டதாரி இளைஞன் ஒருவனைக் கூட்டிக்கொண்டு அலைந்தான் ஆல்பர்ட். அவனுக்கும் இவனே செலவு செய்தான். ஊர்சுற்றி விட்டு ஓய்வாகத் தங்குவதற்கும். அமைதியாக இருந்து படிப்பதற்கும் எழுதுவதற்கும் வசதியாகத் தனக்கு ஒரு இடம் இருந்தால் நல்லது என்று ஆல்பர்ட் கருதினான். 'இரண்டுங் கெட்டான் ஊரான மகிழ்வண்ணபுரம் அவனை வசீகரித்தது. அந்த ஊரின் பெரிய வீடு அவனை ஈர்த்தது.