பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15   ✲   ராதை சிரித்தாள்

வல்லிக்கண்ணன்


போயிருந்தாள். அப்போது பத்து மணியிருக்கலாம். சிவராமன் முற்றத்தில் கட்டிலில் படுத்து புத்தகம் படித்துக் கொண்டிருந்தான். திடீரென்று மாமா, மாமா என்று ராதை பதறிக் கூப்பிடும் குரல் கேட்டது. திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான். அவள் நின்ற தோற்றம்!

அப்பொழுது தான் அவள் குளித்து முடித்திருக்கிறாள். கரிய கூந்தல் அவிழ்ந்து புரண்டு தொங்கி நீர் சொட்டிக் கிடந்தது. பச்சைக் கரையிட்ட வெள்ளை நிறச் சேலையை ஈரமாக, ஒற்றைச் கற்றில் கட்டியிருந்தாள். பாக்கி மடித்துச் சுருட்டி தோளில் போடப்பட்டிருந்தது. அங்கங்கே நெளிந்தும் சுழித்தும் உடலோடு ஒட்டியிருந்த அந்த ஈரப்புடவை அவளது வெவ்விய தேகத்தை மறைத்தும் மறையாததுமாய் அழகை அதிகரித்துக்காட்டியது. வனப்பு மிக்க சித்திரத்தை மறைக்க முயலும் கண்ணாடித் தாள் போல. 'மாமா, அவசரமா வாங்க...சிக்கிரம் வாங்களேன். பெரிய தேளு....' என்று பரபரப்போடு, அவள் வலது கரத்தை நீட்டி அசைத்துக் கூப்பிடும் போது, அவன் பார்வை மறையா அழகாய் மிளிர்ந்த அவள் தோள் மீது பட்டு, மஞ்சு மூடிய குன்றுகள் போல் தோன்றிய மார்பு மேடுகள் மேல் பதிந்தது.

அவசரமாக எழுந்த சிவராமன் திகைத்து நின்றான். தனியாக பருவமங்கை இருக்கும் வீட்டிற்குள் போகலாமா என்ற தயக்கம் பிறந்தது. 'ஐயோ, தேளு ஓடிப் போயிடுமே. அப்புறம் பயந்துக்கிட்டே...' அவள் பதறிக் கூறினாள். அவன் துணிந்து போனான். வீட்டினுள் நுழைந்ததும் 'எங்கே, எங்கே பார்த்தே?' என்று கேட்டான்.

ஆனால் அவன் எதிர்பாராதது நடந்தது. 'மாமா!' என்று தாவி அவனைக் கட்டிப் பிடித்துக் கன்னத்தில் முத்தமிட்டாள் கன்னி ராதை, அவன் தலையை இழுத்து உதடுகளில் முத்தமிடத் துடித்தாள். அவள் உடல் கொதித்தது. ஈரத் துணியின் குளுமைக்கும் மேலாக அவளது தேகத்தின் கதகதப்பை அவன் உணர்ந்தான். அவனுக்கு ஒன்றுமே ஓடவில்லை. அவன் தேகத்திலும் சூடேறுவது போலிருந்தது.

'என்ன இது ராதா! சே, தள்ளிப்போ' என்று அவளை விலக்க முயன்றான். அவளோ இறுக அணைத்து, அவளது கனல் உதடுகளை அவன் உதட்டிலே பொருத்தினாள்.