பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17   ✲   ராதை சிரித்தாள்

வல்லிக்கண்ணன்



சிவராமன் பகல் பூராவும் எப்படியோ பொழுது போக்கிவிட்டு, இரவிலும் சினிமாப் பார்த்துவிட்டு, வெகு நேரம் கழித்தே வீடு திரும்பினான். அவன் கண்கள் அடுத்த வீட்டுப் பக்கம் பாய்ந்தது. அங்கு இருளும் அமைதியும் நிலவின. அவன் நிம்மதியாகப் பெருமூச்சு விட்டான். 'நல்ல வேளை! எல்லோரும் துங்கியாச்சு. அதிகாலையில் எழுந்து முதல் ரயிலைப் பிடிக்க வேண்டியது தான்' என்று நினைத்தான். தெருவாசல் கதவைத் தாளிட்டு விட்டு, வழக்கம்போல் முற்றத்தில் கட்டிலை இழுத்துப் போட்டு படுத்தான். அயர்ந்து தூங்கி விட்டான்.

கதவு தாளிடும் ஓசையும், கட்டிலை இழுத்த சப்தமும் அடுத்த வீட்டில் தூங்கியும் தூங்காத நிலையிலே புரண்டு கிடந்த ராதைக்கு 'அலாரமாக' உதவின. அவள் விழித்துக் கொண்டாள். அவளுக்கு கொதிப்பு தணியவில்லை. பொறிபட்டுக்கனன்ற உணர்வுத் தீ மங்கவில்லை; மடியவில்லை. தனக்கு உணவு பெற்றுத் திருப்தியுற்ற பிறகுதான் ஒருமாதிரி ஒடுங்கும். அவள் உடற்பசியும் உள்ளத்து அரிப்பும் அவளுக்குத் துணிவு தந்திருந்தன. அவள் பலப்பல எண்ணங்கள் வளர்த்தபடி கிடந்தாள்.

மெதுவாக எழுந்து கடியாரத்தைப் பார்த்தாள். மின்மினிப் பூச்சிபோல் மினுத்த 'ரேடியம் டயல்' மினுக்கிக் காட்டியது. அப்போது மணி இரண்டேகால் என்பதை எங்கும் அமைதி. அவள் மெதுவாக, ரொம்ப ஜாக்கிரதையுடன், கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள். வெள்ளியைக் காய்ச்சி ஊற்றியதுபோல பால் நிலவு நின்று காய்ந்தது. நிலவும் இருளும் படிந்து கிடந்தன அவ்வீட்டு வளைவின் வான வெளியிலே. அவள் அடுத்த வீட்டு முற்றத்தின் பக்கம் போனாள்.

இடைவெளியில் படிந்து கிடந்த நிலவின் ஒளிவீச்சால் இருள் கவிந்திருந்த அந்த முற்றம் வெளிறிட்டிருந்தது. சுவரோரத்தில் கட்டிலில் அவன் அயர்ந்து துரங்கிக் கிடந்தான்.

ராதை மெதுவாக அவனருகில் போனாள். அவன் அழகை அள்ளி விழுங்குபவள் போல நோக்கி நின்றாள். ஏதோ இனிய கனவு துயிலில் அவனோடு கொஞ்சிக் கொண்டிருந்தது போலும்! அவன் உதடுகளில் சிரிப்பு நெளிந்திருந்தது. அவன் என்னவோ முனகியபடி புரண்டான்.

ஒரு 2