பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19   ✲   ராதை சிரித்தாள்

வல்லிக்கண்ணன்


வேறிடம் கிடையாமல், தூரத்து ஊரில் வேலை பார்க்கும் ஒருவருக்கு இரண்டாம் தாரமாக ராதையைக் கட்டிக் கொடுத்திருக்கிறார்; மாப்பிள்ளைக்கு நாற்பத்தைந்து வயது இருக்கும்; முதல் மனைவி குழந்தைகள் எதுவும் விட்டுப் போகவில்லை என்கிற விவரங்களை அவனுக்குச் சொன்னார். அவனும் புதிதாக அறிந்து கொள்பவனைப் போல தலையையாட்டி வைத்தான்.

'மாப்பிள்ளைக்கு நாற்பத்தஞ்சு வயகங்கிறது என்ன பெரிய வயசா! அதொண்ணுமில்லே. சொல்லப்போனா, வயசானவங்க தான் பெண்டாட்டியை அருமையா, செல்லமா, அவளுக்குக் குறை எதுவுமில்லாமல் கண்ணு போலக் கவனிப்பாங்க. எங்கேயாவது ராதை செளக்கியமாக இருந்தால் சரிதான்' என்று முடிவுரை கூறினார் தந்தை. 'ஆமாம்' போட்டுவைத்தான் அவன்.

உணர்ச்சி விதைத்த அந்த விபரீத நாடகத்திற்குப் பிறகு சிவராமனுக்கு ராதையைச் சந்திக்க வேண்டுமென்றாலே என்னவோ போலிருந்தது. அவள் தாய் வீடு வருகிறாள் என்று கேள்விப்பட்டதுமே அவன் எங்காவது பிரயாணம் கிளம்பி விடுவது உண்டு. ராதையின் கணவன் ரொம்பத் தொலைவிலுள்ள ஊரில் உத்தியோகத்திலிருந்ததால், அவளும் அடிக்கடி பிறந்தகம் வரமுடியாமல் போயிற்று.

அப்படியும் கூட ஒரு முறை அவர்கள் சந்திக்க வேண்டியதாயிற்று. அப்போது அவள் கன்னம் சிவக்கவுமில்லை! அவள் நாணிக் கோணித் தயங்கவுமில்லை. சகஜமாகப் பேசினாள். அவனுக்குத் தான் ஒரு மாதிரி இருந்தது. அன்று அவள் கேட்டாள் 'உங்களுக்குக் கல்யாணமாகிவிட்டது என்று கேள்விப் பட்டேனே! என்று. ஆமா. அவள் அம்மா வீட்டுக்குப் போயிருக்கிறாள்' என்று சொன்னான். ஏது! கல்யாணமே பண்ணிக் கொள்ளப் போவதில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தீர்களே என்று குறும்பாகச் சிரித்தாள் ராதை. எல்லாம் நாம் நினைக்கிறபடியா நடக்கு! திடீர்னு எதிர்பாராமல் என்னவெல்லாமோ நடந்து எல்லாவற்றையும் மாற்றி விடுகிறது!’ என்று கூறி வெளியே போய்விட்டான் சிவராமன்.

அந்தச் சந்திப்பு நடந்து கூட மூன்று வருவடிங்கள் போய்விட்டன. அவன் மனைவி இறந்துபோனாள் அதற்குப் பிறகு.