பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24   ✲   ராதை சிரித்தாள்

வல்லிக்கண்ணன்


ஏற்படுத்திய அதிர்ச்சி அவனுக்கு அர்த்தமற்ற நடுக்கம் கொடுத்தது. பக்கத்தில் மல்லிகைப் பூ மணம் கம்மென்று பரவி நிற்பதையும், பெண்மையின் தனி ரக வாசனை அலைகள் நிலவுவதையும் அவன் உணர முடிந்தது.

எங்கே இருக்கிறோம் என்ற தெளிவு பிறந்ததும், அவன் உள்ளத்துக் குரல் 'ராதா' என்று சொல்லாக உதிர்ந்தது.

'ஊம்' என்று குழைந்து அவன் அருகில் உட்கார்ந்து குனிந்தாள் ராதை.

'என்ன இது ராதா' என்று அவன் அவசரமாக எழ முயன்றபோது அவள் அவனைப் படுக்கையிலேயே அழித்தி, உதடுகளில் உணர்ச்சியோடு முத்தம் பதித்தாள்.

‘என்ன ராதா, அவர் எழுந்து விட்டால், அப்புறம்...' என்று நடுக்கத்தோடு சொன்னான்.

ஊஹூங். அவர் தூங்க ஆரம்பித்தால் செத்த பிணந்தான். இனிமேல் விடியக்காலம் ஏழரை மணிக்குத்தான் எழுந்திருப்பார். நீங்க என்ன இப்படி பயந்து சாகுறீங்க! என்று கிளுகிளுத்தாள் மங்கை.

'இது நல்லாயில்லை. கல்யாணமாகிக் குடியும் குடித்தனமுமாக இருக்கும் போது...'

மேலே பேசமுடியவில்லை. அவனை அவள் பேசவிட்டால் தானே! முத்த மழை பெய்து கொண்டிருந்தது அவன் முகத்தில்.

'இதுவரை அந்தக் கிழடுக்கு நான் துரோகம் செய்யாமல் இருக்கிறேனே, அதற்கே அது சந்தோஷப்படணும், ஆனால், அது எடுத்ததுக் கெல்லாம் சந்தேகமும், கோபமும்....சேய்!' என்று முனங்கினாள் ராதை.

'உங்களுக்கு முந்திய இரவு ஞாபக மிருக்குதா?' என்று கேட்டுச் சிரித்தாள் ராதை.

'அப்போ என்னவோ அப்படியாச்சு. இப்போ...'

'இப்பவும் நாம் ஒண்ணும் மாறிப் போகலே' என்று கூறி, அதற்கு உறுதிப்பதிவு போல அழுத்தமாக இதழ்களோடு இதழ்கள் பதித்தாள் அலங்காரி!