பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29   ✲    குமாரி செல்வா

வல்லிக்கண்ணன்



'பாவாடையழகியாகக் காட்சி தரும் செல்வா பைஜாமா கந்தரியாகத் திகழ்வாள் திடீரென்று. ஸாரி கட்டிய சிங்காரியாக மாறுவாள். கவுனணிந்த கட்டழகி பரட்டைத் தலையுடனே காட்சி தருவாள். ஒற்றைச் சடை ரெட்டைப் பின்னல்களாகத் துவளும்.... இதை ஆட்சேபிக்கிறீர்களா?' என்று கேட்டார் அவர்.

'இல்லை.'

'ஊம்?....விஷயத்தை விளக்கமாகத்தான் சொல்லுங்களேன்! என்று மனுச் செய்தார் ஆசிரியர்.

'உயரம் ஐந்தடி மூன்றங்குலம். நிறம்-ரோஜாப் பூவேதான். நிறை நூற்றுப்பத்து பவுண்டு. பாடி 33 1/4 அங்குலம். இடுப்பு 32 1/4 அங்குலம்; இடை 31 1/4 அங்குலம்-இப்படியா எழுதுவது? என்று உறுமினாள் அவள்.

'உங்களிடம் கேட்டு விட்டுத்தானே எழுதினேன். இதில் வந்து என்ன தப்பு இருக்கிறது?

‘மண்ணாங்கட்டி! எனது உருவம் ஏணி மாதிரியாகவா இருக்கிறது? உடுக்கிடை, சிற்றிடை என்றெல்லாம் ரசிகர்கள் வியந்து பாராட்ட வேண்டிய இடையில் நயத்தைக் கெடுத்து இவளென்ன உரலோ என எண்ணும்படியாக எழுதிவிட்டீர்களே ஐயா! இதிலென்ன தவறு என்று வேறு கேட்கிறீர்கள். நன்று நன்று நும் ஆசிரியத் திறமை! என்று நீட்டி முழக்கினாள் குமாரி.

'எனக்கெதுவும் புரியவில்லை அம்மானை! புரியும்படி பேசுவதே நல்லதுகாண் அம்மானை'

'புரிய வைப்பதற்காகத்தானே வந்தேன். என் இடையின் அளவு 31 1/4 அங்குலமல்ல. நீங்களே அளந்து பாருங்கள்' என்று சொல்லி நேராக நின்றாள் அப் பூங்கொடி.

ஆசிரியர் பரமசிவம் செயலற்றுப் போனார். எத்தனையோ சவால்களை ஏற்றுக்கொண்ட சூரப்புலிதான் அவர். 'வரலாறு விஷயத்திலே புதுமையாக எழுதலாம் என்று துணியப் போய் வீணான வில்லங்கம் வந்து விட்டதடா பரமசிவம்! அட பரமசிவோம்!' என்று தன் ஆத்மாவுக்கு உபதேசித்த தோழருக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. எதிரே இயற்கை வனப்பும் செயற்கை அழகும் கலந்த காந்த உருவமாய் நின்ற குமாரியைக் கவனித்தார்.