பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

31   ✲    குமாரி செல்வா

வல்லிக்கண்ணன்



‘பிசகென்றால் லேசானதா! உடுக்கிடைப் பெண்ணை தடி இடைக் குந்தாணியாக மாற்றி விட்டீர்களே!

'மன்னிக்கணும். அறியாமலே நேர்ந்த தவறு. உரிய முறையில் திருத்தம் எழுதி விடுகிறேன் என்றார் பரமசிவம்.

'திருத்தத்திற்குத் திருத்தம் வேறு எழுதும்படியாகப் புதுத் தவறு செய்து வைக்காதீர்கள்' என்று கூறிக் கலீரெனச் சிரித்தாள் குமாரி. 'ஞாபகமிருக்கட்டும் ஸார்! நான் வாறேன்!' என்று சொல்லுதிர்த்து விட்டு குதித்தோடி மறைந்தாள்.

'அட கடவுளே! அட நவயுகமே! அட நானே!' என்று வியந்தவாறு நாற்காலியில் சாய்ந்தார் ஆசிரியர். இது கதையா, கனவா, கழுத்தறுப்பா என்று நினைத்தார். 'உண்மை. நிஜமாய் நடந்ததுதான்...உலகம் ரொம்ப வேகமாகத்தான் முன்னேறுகிறது!' என முனங்கினார்.

'குமாரி செல்வா அருமையான பெண். அழகு அழகு அநியாய அழகு! அதைவிட அநியாயமான துணிச்சல், ரொம்ப துணிந்த குட்டி! என்று புலம்பியபடி அட்டைச் சித்திரத்திலே கண் பதித்தார் ஆசிரியர்.

'புதுமையின் குமிழ்; தீவிரத்தின் முகை, துணிச்சலின் சுடர்' என்று வியந்து கொண்டிருந்தது மனம். 'நான் அவளைச் சந்திக்க நேர்ந்தது கூடப் புதுமையான திடீர் நிகழ்ச்சிதானே!' என்ற எண்ணம் எழுந்தது. உள்ளத்தின் உற்சாகம் சிரிப்பாக ஜோடி கூடியது. தானாகவே சிரித்தார் பரமசிவம்.

அன்றொரு நாள் தானாகவே சிரித்துக்கொண்டு தெரு வழியாகப் போன போதுதான் ஆசிரியருக்கு அந்த விபத்து ஏற்பட்டது. பரமசிவம் சூழ்நிலை மறந்து தன் முகத்தில் சிரிப்புத் தீட்டித் திரிவது புதிய விஷயமில்லையே! மேதைகளிடம் காணப்பட வேண்டிய கல்யாண குணம் தன்னிடமும் வளர்வதற்காக அவர் அதிகம் மகிழ்ந்து போவதுமுண்டு.

அன்று அவர் யாரையோபற்றி எழுதிய எந்த நயத்தையோ எண்ணிச் சிரித்தபடி ஒரு வீதியிலே போய்க்கொண்டிருந்தபோது, திடீரென்று விழிப்புற்று 'இதுதான். பூலோகமா!' என்று அதிசயிக்க வேண்டிய அவசியம் அவருக்கு ஏற்பட்டது.