பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32   ✲    குமாரி செல்வா

வல்லிக்கண்ணன்



அது ஒரு கண அதிர்ச்சி. சிலீர் என்று உணர்ச்சி அவர் கன்னத்திலே பட்டது. யாரோ-அல்லது எதுவோ-வேகமாக வந்து மோதியது போலவும் தோன்றியது. எதிர்பாராத இந்தத் தாக்குதலினால் திடுக்கிட்ட அவர் விபத்தின் காரண உருவைக் கண்டதும் அதிகம் திடுக்கிட்டார். 'இதென்ன தடிமாடு மாதிரியா...' என்று வெடித்த சிற்றக் குரல், சர் சர்ரென்று திரியிலே பற்றிய நெருப்பு, பட்டாஸை வெடிக்க வைக்காமல் புஸ்ஸென அணைந்து விடுவதுபோல், ஒடுங்கி விட்டது.

மேலே வந்து மோதியது தடிமாடோ எருமைக் கன்றுக் குட்டியோ அல்ல. குஷி மிகுந்த குட்டிதான்-பாவாடையும் தாவணியுமணிந்த கோலக் குமாரிதான்-என்பதை உணர்ந்ததும் அவர் கோபம் அவள் கையில் கரைந்து கொண்டிருந்த ஐஸ்க்ரீம் போல் உருவற்றுத் தேய்ந்தது.

கலகலவெனச் சிரித்த குமாரி விலகி நின்று, ஐஸ்க்ரீம் பாழாகிப் பயனற்றுப் போவதைத் தடுப்பதற்காக, தனது சிவந்த உதடுகளினால் ஆர்வமாகச் சுவைத்தாள். ஐஸ்க்ரீமை ரசித்த அவள் கண்களில் தனியொளி திகழ்ந்தது. 'இஹிஹி' என்று கனைத்தாள்.

பரமசிவத்திற்குக் குளிர்ந்துபோன கோபம் மீண்டும் சூடு பெறலாமா, கொதித்துப் பாயலாமா என்று குறி கேட்பது போலிருந்தது. தனது கன்னத்திலே பட்டது அவள் எச்சில் படுத்திய ஜஸ்க்ரீம்தான் என்பது நன்றாகப் புரிந்தது. 'எருமை மாதிரி மேலே வந்து விழுந்த கழுதைக்கு மன்னிப்பு கேட்கணும்னு தோணலை பாரு மேன்: திண்ணிப் பண்ணி மொக்குது பாரேன் ஐஸ்க்ரீமை!' என்று உறுமியது அவர் மனம்.

அழகிய மங்கை ஒரே சமயத்தில் எப்படி மூன்று வித மிருகாவதாரம் எடுத்துக் காட்சி தர முடியும் என்று அவரது அந்தராத்மா கேட்கவில்லை. அவ்வளவு ஆத்திரம் அவருக்கு! இன்னும் சில மிருகங்களின் பெயரையும் கூட்டியிருப்பார். அதற்குள் 'ஏ செல்வா! ஏட்டி!' என்ற குரல் அவர் கவனத்தைக் கவர்ந்தது.

'இந்தக் கழுதைக் குட்டியின் பெயர்தான் போலிருக்கு!' என்று நினைத்தார் அவர்.