பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

47   ✲    குமாரி செல்வா

வல்லிக்கண்ணன்


சேர்த்தது நல்லதாயிற்று! என்றான் ராஜா.

'வந்தனம்' என முனங்கினாள் குமாரி.

'நீங்கள் ஏன் படிப்பை நிறுத்திவிட்டீர்கள்? நீங்கள் வராமல் போன நாளிலிருந்து கல்லூரியில் அற்புதக் காந்த அழகு மிகவும் குறைந்து போய்விட்டது என்றே தோன்றுகிறது. மகத்தான நஷ்டம்தான்' என்று குரலிலே இனிமையைத் தேக்கி அறிவித்தான் அவன்.

'அதனாலென்ன. காந்த வனப்பும் கலை ஒளியும் குறுகிய எல்லையினுள் ஒடுங்கிக் கிடக்கலாமா? அது தான் மகத்தான நஷ்டம். கல்லூரிக்கு ஏற்பட்ட நஷ்டம் கலை உலகிற்கும் நாட்டின் அழகு ரசிகர்களுக்கும் நல்ல லாபமாக மாறும் காலம் வந்து கொண்டிருக்கிறது' என்று கூறிக் கலகலச் சிரிப்பு சிந்தினாள் செல்வா.

'அப்படியா! ரொம்ப சந்தோஷம், ரொம்ப சந்தோஷம்!' என்று பாராட்டி மகிழ்ந்தான் மைனர். 'அந்நாள் எந்நாளோ என்று ஏங்கிக் கிடப்பார்கள் என்னைப் போன்ற அழகுப்பித்தர்கள், கலைரசிகர்கள் எல்லோரும்!'

'என்ன சொல்கிறீர்கள், மிஸ்டர் ராஜ்? உங்களுடைய அபிப்பிராயத்தைத்தான் கேட்கிறேன். அழகும் திறமையும் எங்கும் ஒளிவீச சினிமா துலன்னபுரியும் என்பது சரிதான். ஆனால் அதைவிட நேரடியாக மேடைமீது தோன்றிக் கலை விருந்து அளிப்பது தானே நல்லது?' என்று கேட்டாள் குயிலி.

'சந்தேகமில்லாமல்! வனப்பின் வளைவான வானவில்லை ஒவியத்திலே பார்ப்பதும் இனிமையாகத் தானிருக்கிறது. ஆனால் வண்ணங்கள் பூத்த அழகுவில்லை வானத்திலே கண்ணாறக் காண்பதில்தானே அற்புத மகிழ்ச்சி உண்டாகிறது! என்று அளந்தான் அவன்.

'அப்படின்னா நான் சினிமாவில் நடிப்பது நல்லதல்ல என்று சொல்கிறீர்களாக்கும்?' என்று குரலை இழையவிட்டு, இதழ்க்கடையில் குறுநகை செலுத்தி, எழிலாய் முகம் திருப்பி, சுழலும் பார்வையை அவன் மீது நிறுத்தினாள் அவள்.

அப்பொழுது கார் ஒரு வீதியின் திருப்பத்திலே நெளிந்து நீந்தியதனால் ஓரத்திலிருந்த தெருவிளக்கின் மின்னொளி