பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52   ✲    குமாரி செல்வா

வல்லிக்கண்ணன்


கொண்டு வந்து சேர்க்கிறவர்களைத் தங்கள் நலனுக்காகப் பயன்படுத்திக் கொள்ளத் தவறுவதில்லை. அவர்கள் உதவி தேவையில்லாமல் போகிறபோது-அல்லது, அவர்களைவிட அதிகம் துணைபுரியக்கூடியவர்கள் வந்து சேர்கிற பொழுது முந்தியவர்களை உதறி எறியவும் தயங்குவதில்லை. 'செய் நன்றி' என்பதெல்லாம் வாழ்க்கை உயர்வுக்குக் கட்டி வராத பேச்சேயாகும் இவர்களுக்கு!

புகழ்ப்பசி மிகுந்த குமாரி செல்வா தனது வாழ்க்கை உயர்வுக்குக் குந்தகமாகயிருப்பவர்களின் ஆலோசனைகளைக் 'கட்டி வராதபேச்சு' என்று ஒதுக்கிவிட்டாள். ராஜா அவளுக்கு நல்லது என்று எவ்வளவோ சொன்னான். அவன் அநாவசியமாகத் தன் விஷயங்களில் தலையிடுகிறான் என்று சினுங்கினாள் அவள்.

அவன் சிரித்தும், சினந்தும் உபதேசிக்கத் துணிந்த போது சீறி விழுந்தாள் குமாரி. அவளைத் தனது ஸ்ரீமதியாக மாறிவிடும்படி கோரினான் அவன். 'எனக்குக் கல்யாணம் தேவையில்லை. கட்டுப்பாடுகளை விதிக்கும் சம்பிரதாய முறை எதுவுமே எனக்கு வேண்டாம். நான் கலைவளர்க்க வாழ்கிறவள். எனது இஷ்டம்போல் வாழும் உரிமை எனக்கு உண்டு' என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டாள்.

வரவர அவன்மீது அவளுக்கு வெறுப்பு பிறந்து, கசப்பாக மாறி, விரோதமாக முற்றியது. ராஜா வீண் தொல்லை, அமைதியைக் கெடுக்கும் தொண தொணப்பன், கலை நயம் தெரியாது தன்னைக் கழுத்தறுக்க வந்த வீணன் என்று எண்ணினாள். சிடுசிடுத்தாள். எரிந்து விழுந்தாள். ஏசினாள். அவன் உறவு தேவையில்லை என்று சுட்டவும் தயங்கவில்லை.

இதற்குள் குமாரி செல்வா 'நாட்டிய அழகி' என்று பெயர் பெற்று விட்டாள். ராஜாவின் செல்வமும், துணையும், உழைப்பும் அதற்கு எவ்வளவோ உதவின. சென்றதை எண்ணிக் கொண்டிருக்கும் பண்பு பெற்றிராத செல்வா அதையெல்லாம் பெரிதுபடுத்த முடியுமா என்ன!

அவ்வேளையில் அவள் புகழை அதிகரிக்கும் திறமையும் தகுதியும் நாட்டிய நிபுணர் கலையானந்தரிடம்தான் உள்ளன என்று நிச்சயமாகத் தெரிந்தது. அவளுக்கு நடனம் கற்றுக் கொடுக்க வந்தவர் அவர். புதுப்புது நடனங்களைக் கற்பித்துப் பழக்கி அவள்