பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60 ஒரு வீட்டின் கதை வல்லிக்கண்ணன் பார்த்திருக்கும். வடமலையப்ப பிள்ளை, கிழக்கே உள்ள ஊர்களின் விவகாரங்களை அதற்கென்று ஏற்பட்ட ஆறு மாதத்தில் 'பைசல் பண்ணுவார்'. இப்படி, மேற்கு, தெற்கு, வடக்குத் திசைகளிலிருந்து வருகிற வழக்குகள் குறைகளை எல்லாம், அந்த அந்தத் திசைகளுக்கு உரிய ஆறு மாத காலத்தில் கவனித்து முடிப்பார். இவ்வாறு 'திசைகட்டி ஆண்ட திருவாளர்' வடமலையப்பரின் வழி வந்தவர்தான் பிறவிப் பெருமாள். தனித்தன்மை கொண்ட பெயர்களைத் தங்கள் குலக் கொழுந்துகளுக்கும், தாங்கள் வசிக்கும் இடங்களுக்கும் இட்டு மகிழ்வதை ஒரு பெருமையாகக் கொண்டிருந்தவர்கள் பிறவிப் பெருமாளின் மூதாதையர். அவர்கள், 'ஒத்தை வீடு' இருக்கிற ஊருக்கு மகிழ் வண்ணபுரம் என்ற அழகான பெயரைச் சூட்டினார்கள். அவர்கள் வழிபட்டு வந்த மகிழ்வண்ண நாதர் என்ற தெய்வத்தின் திருநாமத்தையே தங்கள் ஊருக்கும் இட்டார்கள். 'வழுவல, கால வகையினானே' என்ற தர்மத்தின்படி அந்த ஊரின் பெயரையும் இஷ்டம்போல் சிதைத்து உச்சரிக்கலானார்கள் பின்வந்தவர்கள். மகிழண்ணபுரம் என்றும், மகுணபுரம் என்றும், மண்ணபுரம் என்றும் இன்னும் பலவாறாகவும் பெயர்பெற நேரிட்டது அந்த இடம். என்றாலும், மகிழ்வண்ணபுரம் என்று வாய்நிறை செவிகுளிர -மனம் கனிய உச்சரித்து மகிழும் இயல்பினரும் இல்லாமலில்லை. அவர்களில் ஒருவராகத்தான் பிறவிப்பெருமாள் பிள்ளையும் விளங்கினார். பெரியதுகளையே எண்ணி, பெரிய முறையிலேயே காரியங்கள் செய்து பெரிய பிள்ளை என்று பெயர் பெற்று வாழ்ந்த பிறவிப் பெருமாள் அந்தப் பெரிய வீட்டைக் கட்டியதே சுவையான அனுபவம்தான். ஒவ்வொரு நபருக்கும் சுவாரசியமான ஒரு கதை உண்டு. ஒவ்வொரு குடும்பமும் சுவைமிக்க கதைகளைக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஊரும், ஒவ்வொரு சமூகமும் தனித்தனியே ரசம் நிறைந்த கதைகளின் களமாக இருக்கின்றன.