பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

69 ஒரு வீட்டின் கதை வல்லிக்கண்ணன் "ஊரிலே பதுகாப்பு நிறைஞ்சிருக்கணும். பாதுகாப்புக்குக் குந்தகம் ஏற்பட்டால், நம்ம உடைமைகளுக்கு என்னாகுமோ ஏதாகுமோ என்று மனுசன் சதா பயந்துக்கிட்டே இருக்க நேர்ந்தால், அந்த ஊரிலே யார்தான் சந்தோசமாகவும் நிம்மதியாகவும் வாழமுடியும்?" என்றார் பிறவிப்பெருமாள். உண்டு முடித்தவர்கள், சாப்பிட்ட இலைகளை எடுத்துத் தோட்டத்தில் கொண்டு போட்டுவிட்டுக் கை கழுவினார்கள். கொடுக்கப் பெற்ற வெற்றிலைபாக்கை இருகை நீட்டிப் பணிவுடன் வாங்கிக் கொண்டு, "நாங்க வாறோம், ஐயா" என்று கும்பிட்டு விட்டு வெளியேறினார்கள். "எல்லோரும் நல்லவங்கதான். ஆனால் சிலசமயம் அவங்க போதாத காலம் புடதியிலே ஏறி உட்கார்ந்துக்கிட்டு, அவங்களை ஆட்டிப்படைக்குது. அப்போதான் எவன் என்ன செய்வான் என்று சொல்லமுடியாமப் போகுது" என்று பிள்ளை கூறினார். "நீங்க சொல்றது சரிதான் அண்ணாச்சி" என்றார் தம்பியா அவருக்கு ஒரு பெரிய டம்ளர் நிறைய மோர் வந்து சேர்ந்தது. அதை குடித்துவிட்டு, கொஞ்சநேரம் ஊர்க்கதை பேசிப் பொழுது போக்கிவிட்டு, பணத்தோடு போய் சேர்ந்தார் அவர். பிறவிப்பெருமாள் பிள்ளையின் கீர்த்திப் பிரதாயங்களில் மற்றுமொரு சேர்மானமாக இந்த நிகழ்ச்சியும் கூடிக்கொண்டது. இதுபோல் எத்தனையோ, 'அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி உதவ மாட்டான்' என்பது பிள்ளை அவர்களின் திட நம்பிக்கைகளில் ஒன்று ஆகும். வழக்கு, விசாரணை என்று அந்த வீடு தேடி வந்து விட்டால், குற்றம் சுமத்தப்பட்டவனை நிறுத்தி நிதானமாகக் கேட்டுப்பார்த்து உடனே ஈவு இரக்கம் இல்லாமல் கையில் கிடைத்ததைக் கொண்டு அடித்து நொறுக்கி விடுவார் பிள்ளை. பயம் உண்டாக்கணும்; சம்பந்தப்பட்டவனுக பயந்து நடுங்கணும்; அப்ப உண்மை தானாக வந்துவிடும் என்று அவர் சொல்வது உண்டு. அவர் சம்பந்தப்பட்ட மட்டில்அவருடைய இந்தக் கொள்கை அவருக்கு வெற்றி பெற்றுத் தந்தது.