பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

71 ஒரு வீட்டின் கதை வல்லிக்கண்ணன் போக, வேடிக்கை பார்க்கும் கும்பல் கனத்தது. ஊருக்கு வடக்கே இருந்தது கோயில். அதுக்கும் வடக்கே பொட்டல் வெளி. அதற்கும் அப்பால் 'காடு' என்று பெயர் பெற்றிருந்த - முள் செடிகள் கொடிகள் புதர்கள் மண்டிய-பிரதேசம். அங்கே ஒரு இடத்தில் பாழுங்கிணறு ஒன்ற இருந்தது. அதனுள் கிடந்தது கிடாரம். "ஏ பிசாசுப் பய! இதை இவ்வளவு தூரம் எப்படி தூக்கிக் கொண்டு வந்து போட்டான்?" என்று வியக்காதவர்கள் கிடையாது அந்தக் கூட்டத்தில். பிறவிப்பெருமாள்பிள்ளை பூசாரியின் முதுகில் ஓங்கி ஒரு குத்து விட்டார். "உன் கூட எத்தனை பேர் சேர்ந்திருக்காங்க? அவங்க யாரு?" என்று அதட்டிக் கேட்டார். அவன் வாய் திறவாமல், குத்துக்கல் மாதிரி நின்றான். "அடேய், நீ சொன்னால் பிழைச்சே, இல்லையோ உன்னையே இங்கே பலி கொடுத்திருவேன். இப்படியே உன்னையும் இந்தக் கிணத்துக்குள்ளே அனுப்பிருவேன்" என்று சொன்னார். அவர் சொன்ன தோரணையே, அவர் அப்படிச் செய்யத் தயங்கமாட்டார் என்ற விளம்பரப்படுத்தியது. பூசாரி வாய் திறவாது நிற்கவும், பிள்ளை அவன் கழுத்திலே கை வைத்து அவனை முன்னே தள்ளுவது போல் ஒரு உலுக்கு உலுக்கினார். அவன் பயந்து அலறினான். 'ஐயா, உண்மையை சொல்லிருதேன்' என்று கத்தினான். "நீ எதையும் சொல்ல வேண்டாம். ஆள்களை காட்டு" என்று அவனை மீண்டும் குலுக்கினார் பிள்ளை, அவன் இரண்டுபேர் இருக்குமிடத்தை அவர்கள் பெயர், வீடு, தெரு, ஊர் எல்லாவற்றையும் சொன்னான். அந்த இரண்டு பேரும் பக்கத்து ஊர்க்காரர்கள். பூசாரிக்கு உறவினர் என்று தெரிந்தது. மூன்று பேரும் சேர்ந்து, ஒரு கட்டை வண்டியில் வைத்துக் கட்டி, கிடாரத்தை எடுத்து வந்து, காட்டுக் கிணற்றில் பதுக்கி வைத்திருக்கிறார்கள். ஊரில் அமளி அடங்கிய பிறகு, அதை வெட்டித் தகடுகளாக்கி விற்பனை செய்யலாம்; கிடைத்த பணத்தை