பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

77 ஒரு வீட்டின் கதை வல்லிக்கண்ணன் ஆனால் உள்ளத்தில் அது ஆழமான வடுவாகப் பதிந்து கிடந்தது. தனக்கு நேர்ந்த அவமானத்தை எண்ணி எண்ணி உருகிப் போனார் பிள்ளை. அவரது மிடுக்கும் அதிகாரமும் பம்மி விட்டன. "பிறவியாபிள்ளை என்ன போக்குப் போனார்! எல்லாருக்கும் விசாரணை என்றும், தீர்ப்பு என்றும், தண்டனை என்றும் அட்டகாசமாக ஆக்கினைகள் செய்து வைத்தாரே, இப்ப செய்றதுதானே! மகள் இப்படிப் பண்ணிப்போட்டாளே! எப்பாடு பட்டாவது அவளை கண்டு பிடித்து இழுத்து வந்து இந்த தர்மராசா நியாயம் வழங்கவேண்டியதுதானே முறை? அதை விட்டுப்போட்டு அறுதலி மாதிரி வீட்டுக்குள்ளே முடங்கி விட்டாரே!" என்று பலரும் பேசினார்கள். இந்த ரகமான பேச்சுக்கள் பிள்ளையின் காதுகளை எட்டாமல் இருக்குமா? எட்டின. அதனால் அவர் மேலும் குமைந்தார். படுத்த படுக்கையானார். சீக்கிரமே 'ஐயா இடத்துக்குப் போய் சேர்ந்தார்'. மூனறு பிறவிப்பெருமாள் பிள்ளை உயிரோடு இருந்த வரையில், அந்த ஒத்தை வீட்டில் பெண்களின் குரல் ஓங்கி ஒலித்ததில்லை. அவருடைய மனைவி தையல்நாயகி ஊரில் இருக்கிறாளா, அல்லது வெளியூர் போயிருக்கிறாளா என்று மற்றவர்கள் அடிக்கடி சந்தேகப்படக்கூடிய அளவுக்கு அந்த அம்மாள் வீட்டினுள் ஒடுங்கி யிருந்தாள். அவளைக்கண்டு பேசுவதற்கென்று எப்பவாவது யாராவது வீடு தேடி வருவது உண்டு. அவர்கள்கூட பின்வாசல் வழியாக வந்து, அடுப்படியில் உட்கார்ந்து வம்பளந்து விட்டு, வந்த சுவடு தெரியாமல் போய்விடுவதுதான் வழக்கம். அந்த வீட்டில் விசேஷ நாட்களில் கலகலப்பும், பெண்மைப் பொலிவும். பேச்சும் சிரிப்பாணியும் நிறைந்து நிற்கும். அதே போல, மகள் சூடிக்கொடுத்த நாச்சியார் தன் தோழிப் பெண்களோடு கூத்தடிக்கிற போதும் வீடு தூள் பறக்கும்.