பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6 * ராதை சிரித்தாள்

வல்லிக்கண்ணன்


அவன் திடுக்கிட்டு நோக்கினான். அவள் ஏன் சிரித்தாள்? அவனுக்கு விளங்கவில்லைதான்.

அவள் நகைத்தபடியே சொல்லுதிர்த்தாள். ‘நல்லாருக்கு நீங்க வந்ததும், எதையோ பறிகொடுத்தது போல குறுகுறுன்னு நிற்பதும்.....ஏன், என்ன விசயம். சொல்லுங்களேன்!’

சிவராமன் தனது தவறை உணர்ந்தான். தலையையாட்டி மழுப்பி, அசட்டுச் சிரிப்பு சிரித்தான். ‘ஒண்னுமில்லே. ஏதோ யோசனையாக அப்படியே நின்னுட்டேன்.....’

‘நீங்களும் உங்க யோசனையும்!’.... நாலு வருஷங்களுக்கு முன்னாலே எப்படி யிருந்தீகளோ அதே மாதிரித்தான் இன்னைக்கும் இருக்கீக. கொஞ்சம் கூட மாறலே போலிருக்கு, ஊம் என்று மெதுவாக நகைத்தாள் ராதை, பிறகு ‘பரவால்லே, உட்கார்ந்து யோசியுங்க. நான் போயி சூடான காபி கொண்டுவாறேன். அதைக் குடித்த பிறகு யோசித்துக் கொண்டேயிருந்தாலும் சரி. குளிச்சாலும் சரி. என்ன சரிதானா?’ என்று சொல்லி ஒயிலாகத் தலையசைத்து, குறும்புப் பார்வை சிதறிவிட்டு உள்ளே போனாள்.

‘ராதா, நீ கூட மாறவில்லைதான்’ என்று சொல்ல வேண்டும் போலிருந்தது அவனுக்கு. ஆனால் வார்த்தைகள்தான் உதிரவில்லை.

அவன் பார்வை வெளியே புரண்டது. வண்டிக்காரன் சாமான்களை இறக்கி வைத்து விட்டு நின்றான். அவனுக்கு உரிய காசைக் கொடுத்து அனுப்பக் கூட மறந்துபோனதை நினைத்ததும் சிவராமனுக்கு சிரிப்பு வந்தது. மீண்டும் அலுத்துக் கொண்டான் தனது மனக் குழப்பத்தை எண்ணி அவனை அனுப்பியதும், ‘சே, என்ன குழப்பமிது! அர்த்தமற்றது! அவள் என்ன நினைக்கமாட்டாள்?’ என்று எண்ணினான்.

‘நான் இங்க வந்திருக்கவே கூடாது. முடியாது என்று எவ்வளவு மறுத்தும் அவள் அம்மாவும் அப்பாவும் கெஞ்சு கெஞ்சு என்று கெஞ்சப் போய் தட்ட முடியவில்லை. என்ன செய்வது? ஆனால் முன்பு நடந்ததையும் மறக்க முடியவில்லையே!’ என்று பெருமூச் செறிந்தான்.

ஈஸிச்சேரில் சாய்ந்தான். அதற்குள் அவளும் காப்பி-