பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78 * ஒரு வீட்டின் கதை

வல்லிக்கண்ணன்


சின்ன வயசிலிருந்தே அவள் 'அப்பா செல்லம்'. அவள் என்ன லூட்டி அடித்தாலும், எத்தனை பேரைக் கூட்டி வைத்து ஆட்டம் போட்டாலும், பிறவிப்பெருமாள் பிள்ளை அதட்டிச் சொல்ல மாட்டார். 'சின்னப் புள்ளைகள் விளையாடத்தானே செய்யும்! விளையாடிட்டுப், போகட்டும். வீடுதான் பெரிசா இருக்குதே புள்ளைகளாவது ஓடி ஆடி விளையாடி, வீட்டுக்கு உயிர் அளிக்குதே! என்றுதான் அவர் சொல்வார்.

அம்மாதான் 'தொண்டைத் தண்ணிர் வற்றிப் போகும்படி' கூப்பாடு போட்டுக் கொண்டிருப்பாள். சூடி அதை எல்லாம் சட்டை பண்ணுவதில்லை.

வீட்டினுள் தொட்டிக்கட்டில் ஊஞ்சல் தொங்கியது. சூடியும் அவள் சிநேகிதிகளும் சதா அதில் ஆடிக் களிப்பார்கள். பல அறைகளிலும் எங்காவது உட்கார்ந்து தாயக்கட்டம், பல்லாங்குழி என்று விளையாடி மகிழ்வார்கள். பாட்டுப் பாடிக்கொண்டு அம்மானை ஆடுவார்கள். வாசலில் பாண்டி விளையாடி ஒரே புழுதிக் காடாக்குவார்கள். நிலா பூச்சொரியும் இரவுகளில் பலவிதமான ஆடல்களும் ஆடி பொழுது போக்குவார்கள். சூடி கல்யாணம் ஆகிப் போகிறவரை இதெல்லாம் அந்த வீட்டில் கோலாகலமாக நடந்து கொண்டுதானிருந்தது.

அவள் திருமணமாகி, கணவன் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்த பிறகு, ஒத்தை வீட்டில் கோலாகலக் கலகலப்பும் குடியோடிப் போய்விட்டது என்றே சொல்லவேண்டும். அவள் ஒரே அடியாக மாமா மகனோடு எங்கோ போய்விட்ட பிறகு அந்த வீட்டின் வாசல் வெறிச்சோடியது; உள்ளே சோகம் குடிபுகுந்தது. அதன் ஆட்சியை வலுப்படுத்துவது போல் சேர்ந்துகொண்டது பெரிய பிள்ளையின் மரணம்,

பிறவிப்பெருமாள் பிள்ளைக்கு இரண்டு பையன்கள். இருவரும் சின்னப் பையன்கள்தான். பெரியவன் புன்னைவன நாதனுக்குப் பத்து வயது. சின்னவனான வெயிலுகந்தநாதனுக்கு ஏழு வயது.

ஆகவே, தையல்நாயகி அம்மாள்தான் குடும்பப் பொறுப்பை ஏற்று நடத்த வேண்டியதாயிற்று. இந்த நிலைமை ஏற்பட்ட பின்னர், அம்மாளின் சுயரூபம் மெதுமெதுவாக மேலோங்கி ஆட்டம்