பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80 * ஒரு வீட்டின் கதை

வல்லிக்கண்ணன்


 நல்லூர் குறிகாரன், எப்போதும்வென்றான் என்ற ஊரிலிருந்த சோதிடன், மடவார்வளாகம் சாமிகொண்டாடி-என்று சிலாகித்துப் பேசி, அம்மாளின் மன அரிப்பைத் தூண்டிவிடுவதும் இயல்பு ஆயிற்று. சில பேரிடம் பணம் கொடுத்து அந்த இடங்களுக்குப் போய் குறி கேட்டு வரும்படி அவள் அனுப்புவதில் ஆர்வம் கொண்டாள்.

வீட்டு வாசலுக்கு வரும் குறிகாரிகளையும் மந்திரவாதி களையும் சோதிடர்களையும் அவள் தாராளமாக ஆதரித்தாள். அனைவரும் அவளது மகத்தான எதிர்காலம்பற்றி வரையறை இல்லாது அளந்து தள்ளினார்கள். மனம் மகிழ்ந்த அம்மாள் அரிசியாகவும் நெல்லாகவும், பழந்துணிகள் என்றும் அவர்களுக்குப் பரிசளித்தாள்.

எனவே, ஊருக்குப் பிழைப்பு தேடி வரும் குடுகுடுப்பைக் காரன்கள், கோடங்கி குறிகாரன் வகையினருக்கு, 'அடையா நெடுங்கதவுடன் விளங்கிய ஒத்தை வீடு நல்ல புகலிடமாக அமைந்து விட்டது.

வயிறு குளிரச் சாப்பிடும் வாய்ப்பைப் பெறுகிறவர்கள், அப்படி அருள்புரிகிற அம்மாளின் செவி குளிர-மனம் குளிர இனிப்பான சேதிகள் சொல்லாமல் இருக்க முடியுமா? சொன்னார்கள். நிறையவே சொன்னார்கள்.

அந்த வீட்டில் புதையல் இருக்கிறது என்றார்கள். அது அந்த அம்மாள் காலத்திலேயே கிடைத்து விடும் என்று உறுதி கூறினார்கள். சின்ன மகன் வெயிலு ரொம்ப அதிர்ஷ்டசாலி என்றார்கள். புதையல் அவனுக்கே கிடைக்கக்கூடும் என்றும் சொன்னார்கள்.

ஒரு சோதிடர் எல்லோரையும் மிஞ்சி விட்டார். "வெயிலுகந்தநாதனின் ஜாதகம் ரொம்ப அதிர்ஷ்ட ஜாதகம். ராஜ ஜாதகம். இதைப்போன்ற யோகம் உடைய ஜாதகத்தை நான் இந்த ஜில்லாவிலேயே இதுவரை பார்த்ததில்லை. இந்த ஜாதகனுக்கு குரு சந்திர யோகம் இருக்கு. இவன் பிரமாதமா வாழப் போறான்" என்று அளந்தார். சொன்னதையே திரும்பத் திரும்பச் சொன்னார்.

அதைக் கேட்ட அம்மாளுக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம். இனிக்கும் இந்தச் செய்தியை சொன்ன சோதிடருக்கு அவள்