பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

81 * ஒரு வீட்டின் கதை

வல்லிக்கண்ணன்


நிறையவே பணம் கொடுத்தாள். .

அன்று முதல் சின்ன மகன் மீது அவளுக்கு இருந்த பிரியம் மேலும் அதிகரித்தது. ‘வருவது தெரிந்து கூறியவர்கள் உடனடியாக வர இருந்த ஒரு துயர அனுபவத்தைப் பற்றி சாடைமாடையாகக் கூடச் சொல்லவில்லை. பாவம், அவர்கள் என்ன கண்டார்கள்! ஆனாலும் அது நிகழத்தான் செய்தது.

மழைக்காலம். திடீர் திடீரென்று மழை பெய்தது. சிலசமயம் விடாது, கொட்டு கொட்டென்று கொட்டியது. அப்படி ஓயாது மழை கொட்டிக் கொண்டிருந்த ஒரு அந்திப் பொழுதிலேதான் அது நிகழ்ந்தது.

எல்லா வீடுகளிலும் உயிரியக்கம் இல்லாதது போல் தோன்றியது. ஒத்த வீட்டிலும் கதவு அடைத்துக் கிடந்தது.

யாரோ கதவைத் தட்டுவது போல் ஓசை எழுந்தது. உள்ளே சும்மா படுத்துக் கிடந்த தையல் நாயகி, 'நாசமாப்போற காத்தும் மழையும் என்ன வர்த்து வருது! பேயாய் படுத்துதம்மா சனியன். சன்னல் கதவை ஓங்கிச் சாத்தட்டா, வாசல் கதவை தட்டிக் குலுக்கட்டாயின்னு...' என்று தானாகவே பேசிக் கொண்டாள்.

மறுபடியும் கதவு தட்டப்படுகிற ஓசை. சந்தேகத்துக்கிட மில்லாமல் ஆள் தட்டுவதாகத்தான் தோன்றியது.

அம்மாள் எழுந்து வந்து கதவைத் திறந்து பார்த்தாள். திடுக்கிட்டாள். 'யாரு-யாரு நீ?' என்று கேட்டாள். ஆயினும் தொண்டைக் குழிக்குள்ளேயே அது ஒடுங்கி விட்டது. குரல் சரியாகவே எழவில்லை .

அவள் தேகம் நளுக்கிக் கொடுத்தது ஒரு கணம். உள்ளத்தில் ஒரு பதைப்பு. 'பேய் பிசாசாக இருக்குமோ? இன்னிக்கு செவ்வாய்கிழமைதானே? செவ்வாய் அந்திப் பொழுது..'

இந்த நினைப்பு எழவும், மடாரென்று கதவை ஓங்கிச் சாத்தி தாழ்ப்பாளை அவசரமாகப் போட்டாள். 'அப்பனே முருகா' என்று முணு முணுத்து, திருநீற்றை அள்ளி நெற்றி நிறையப் பூசிக்கொண்டாள்.

அந்நேரத்தில் பையன்களும் வீட்டில் இல்லை. அவர்கள் சிற்றப்பாவோடு எங்கோ ஒரு ஊருக்குப் போயிருந்தார்கள். ஒரு 6