பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 ஒரு வீட்டின் கதை வல்லிக்கண்ணன் வெறுக்கலானான். அடிக்கடி வீட்டுப் பக்கம் தலைகாட்டாமல் போகத் தொடங்கினான். அவள் காரணம் கேட்டால் ஏக்கம் பேச்சும் அடியும் மிதியும்தான். அவள் வாழ்க்கை நரகம் ஆகிவிட்டது. இருந்தாலும் சகிப்புத் தன்மையோடு நாட்களை கழித்து வந்தாள். அதிலும் சோதனை மிகுந்தது. ஒரு நாள் வெளியே போன சுந்தரமூர்த்தி திரும்பி வரவேயில்லை. ஒரு நாள்-இரண்டு நாள் என்று அவள் நாட்களை எண்ணிக் காத்திருந்தாள். பத்து நாட்களாகியும் அவன் வரவில்லை. அவன் வரவே மாட்டான் என்று அவளுக்குப் பட்டதும் அவள் பயந்து போனாள். என்ன செய்வது? எப்படி காலம் கழிப்பது? ஆற்றிலே குளத்திலே விழுந்து செத்துப் போகலாம் என்று எண்ணினாள். அதற்கும் துணிச்சல் எழவில்லை. அம்மாவை அடிக்கடி நினைத்தாள். அப்பாவைப் பற்றி எண்ணினாள். அவர்களைப் பார்க்க வேண்டும் என்று மனம் தவித்தது. ஆசை இருந்தாலும், கூடவே பயமும் வெட்கமும் தடை விதித்தன. முடிவில், என்ன ஆனாலும் சரிதான்; ஊருக்கே போவது என்று தீர்மானித்தாள். கைவசமிருந்த பண்ட பாத்திரங்களை விற்றுக் காசாக்கிக் கொண்டு புறப்பட்டு வந்தாள். மகிழ்வண்ணபுரத்தில் காலடி வைப்பதற்கு முன்பே, தந்தை இறந்து சில வருடங்கள் ஆகிவிட்டன என்ற தகவல் அவளுக்குக் கிடைத்தது. அம்மாவைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் பிடித்துத் தள்ளியது. இரவு நேரத்தில்தான் ஊருக்குள் வரவேண்டும் என்று சூடி விரும்பினாள். மழை அடிக்கடி பெய்தது தொல்லையாக இருந்தது. அதுவே ஒரு வசதியாகவும் அமைந்தது. ஆள்நடமாட்டம் இல்லை. அவள் நனைந்தவாறே வந்தாள். மகளின் தலைவிதியை எண்ணி தையல்நாயகி கண்ணிர் வடித்தாள். போயும் போயும் உனக்கு புத்தி இப்படிப் போச்சே! உன் தலையில் நீயே மண்ணை வாரிப் போட்டுக்கிட்டியே" என்று புலம்பினாள். சூடி வந்ததை யாருக்கும் தெரிவிக்கக் கூடாது என்று தாய் நினைத்தாள். ஆனால் அது எப்படி சாத்தியம்? தையல்நாயகியைக் கண்டு பேசுவதற்காக வந்தவர்கள் தெரிந்துகொண்டார்கள். அவள் முன்னே அனுதாபப்பட்டார்கள்;