பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7   ✲   ராதை சிரித்தாள்

வல்லிக்கண்ணன்


கொண்டு வந்து விட்டாள். 'ஊம்' என்று நீட்டினாள்.

'சரி, மேஜை மேலே வையேன, குடிக்கிறேன்' என்றான்.

'வாங்கிக் குடியுங்க. அப்புறம் ஆறிவிடப் போகுது' என்று அருகில் கொணர்ந்தாள் டம்ளரை. அவன் பார்வை வளையணிந்த அந்த அழகிய கரத்தில் பதிந்தது. 'ஊம்' என்று அவசரப் படுத்தினாள் ராதை, கை நீட்டி வாங்கிக்கொண்டான். குடித்தான்.

'ஊரிலே என்ன விசேஷம்? அம்மா ஏதாவது சொல்லி அனுப்பினாளா? அவளே வருவதாக எழுதியிருந்தாளே, ஏன் வரலே?' இப்படி 'ஆயிரம்' கேள்விகள் கேட்டாள்.

அவன் சொன்னான்: 'உன் அம்மாவும் அப்பாவும்தான் வாறதா இருந்தது. ஆனால் திடீர்னு உன் அப்பாவுக்கு ஜூரம் வந்திட்டுது. வேறே அவசர வேலைகள் கிடக்கு. அதனாலே பொங்கல்படியையும் மற்றச் சாமான்களையும் கொண்டு போய்க் கொடுக்கும்படி சொன்னாக. நான் என்னாலே முடியாதுன்னுதான் சொன்னேன். எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் முடியலே. வேறே வழியில்லை, நீதான் போயாகணும்னு மாமா கட்டாயப்படுத்தி என்னை அனுப்பி வச்சிட்டாக.'

'இங்கே என்ன புலி கரடி யிருக்கா, உங்களைப் புடிச்சுதின்றும்னு பயப்படதுக்கு ? நீங்க ஏன் அப்படி அடம் சாதிக்கணும்...' என்று சிரித்துக் கொண்டே கேட்டாள் அவள்.

'இல்லே, ராதா... வந்து....'

அவனுக்கே தெரியவில்லை என்ன காரணம் சொல்வது என்று.

'நான் உங்களைப் பார்த்தே நாலு வருஷமிருக்குமே. போன தடவை நான் ஊருக்கு வந்திருந்த போது, நீங்க இல்லை. ரெண்டு மூணு தடவை வந்த போதெல்லாம் உங்களைப் பார்க்கவே முடியலியே. எப்ப பார்த்தாலும் ஸர்க்யூட்டு தானாக்கும்! இப்பகூட வேலை எதுவும் பார்க்கலியே?'

'வேலை என்ன வேலை! அதெல்லாம் ஒண்ணும் எனக்குப் பிடிக்கலே, இஷ்டப்பட்டால் ஊரிலே தங்குவது, இல்லைன்னா இப்டீ கம்மா ஊர் சுற்றுவது. இதுதான் என் வாழ்க்கையாப் போச்சே எனக்கு இதுதான் பிடிச்சிருக்கு' என்றான் அவன்.