பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91 ஒரு வீட்டின் கதை வல்லிக்கண்ணன் துயரமும் அதிகரிக்கும்படி காரியங்கள் நிகழ்ந்தன. புன்னைவனம் இரவில் சரியாகத் தூங்கவில்லை. பதறிப் பதறி விழித்தான். துர்ச்சொப்பனம் கண்டவன் போல் தூக்கத்தில் அலறி அடித்து எழுந்து உட்கார்ந்தான். பிறகு துங்குவது போல் கிடந்தான். காலையில் அம்மாள் அவனை கவனிக்கச் சென்ற போது, அவன் நிலைமை மோசமாகியிருந்தது. உடல் கொதித்தது. அவனது கண்கள் மிரளமிரள உருண்டு கொண்டிருந்தன. "ராசா, என்ன செய்யுது ஐயா?" என்று அருமையாக விசாரித்தாள் அம்மாள். அவன் பேசவேயில்லை. பயந்தவன் மாதிரி அலறினான். "அந்தா...அந்தா...அம்மா, நானில்லே..." என்று கதறினான். "புள்ளை நல்லாப் பயந்திருக்கு. நேத்து ராத்திரி அப்படி ஆயிட்டுதுல்லா. அதுதான்" என்று அங்கலாய்த்தாள் தாய். செல்லம் பண்டிதருக்கு ஆள் அனுப்பினாள். அவர் அகப்படவேயில்லை. இரண்டு மூன்று தரம் வேலைக்காரன் அலைந்தும் பயனில்லை. பண்டிதர் தலைமறைவாக எங்கோ போய் விட்டார் என்று தோன்றியது. அவர் வந்தாலும் எதுவும் சாதித்திருக்க முடியாது. வேண்டுமானால், ஒரு செந்தூரப் பொடியைத் தந்து, தேனிலே கலந்து கொடுங்க என்று கூறியிருப்பார். திருநீறை அள்ளி நெற்றியில் பூசி விட்டு, உள்ளங்கையில் மீதியை வைத்து, அவன் முகத்துக்கு நேராகப் பூ என்று ஊதியிருப்பார். அதிலே கொஞ்சம் அவனது கண்களில் விழுந்து, அவன் கண்ணைக் கசக்கும்படி செய்திருக்கும். இப்போது அதெல்லாம் நடக்கவில்லை. எதுக்கும் அவசியம் இல்லாமலும் போய்விட்டது. பையன் உள் பயத்தினால் மிகுதியும் பாதிக்கப்பட்டு, அந்த பயத்துக்கே இரையாகிப் போனான்.... புன்னைவனநாதன் செத்துப் போனான். அப்போது அவனுக்கு வயது பதினைந்து. ஒத்தை வீட்டிலே தையல்நாயகி அம்மாளின் ஒலம் பயங்கரமாக ஒலித்தது. கேட்போர் நெஞ்சைக் கவ்விப் பிழிவது போல் சோகம் அதில் படிந்திருந்தது.