பக்கம்:ஒரே உரிமை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



நன்றி

ன்னுடைய வாழ்க்கைக்கு வழிகாட்டியாகவும், வளத்துக்கு நீரூற்றாகவும், அன்புக்கு உறைவிடமாகவும், ஆர்வத்துக்குப் பிறப்பிடமாகவும் உள்ள ஆசிரியர் “கல்கி” அவர்களுக்கு என உளங் கனிந்த நன்றி முதலில் உரியதாகும்.

அடுத்தபடியாக என்னுடைய நினைவில் என்றும் நீங்காத இடத்தைப்பெற்றிருப்பவர்கள் தமிழர்கள். பொருளாதாரச் சீர்கேட்டினால் இன்று அவர்களுடைய வாழ்க்கை எத்தனையோ விதமான தொல்லைகளுக்கு உள்ளாகியிருக்கிறது. அத்தனை தொல்லைகளுக் கிடையிலும் நான் எதிர்பாராத அளவு எனக்கு ஆதரவு காட்டிவரும் அவர்களுக்கு என் நன்றி மட்டுமல்ல; எஞ்சியுள்ள வாழ்நாட்களும் உரியவை. இன்னும் முகமறிந்த நண்பர்கள்— முகமறியா விட்டாலும் அகமறிந்த நண்பர்கள் பலர் தென்னாட்டிலும் வடநாட்டிலும் கடல் கடந்த பிரதேசங்களிலும் மூலைக்கு மூலை இருக்கிறார்கள். அவர்கள் என்னுடைய கதைகளைப் படிப்பதோடு வாழ்த்தியும் வைதும் கடிதம் எழுதுகிறார்கள். அதன் மூலம் கூம்பும் உள்ளம் மலர்கிறது; தேயும் நம்பிக்கை வளர்கிறது; செல்லும் பாதை செப்பனிடப்படுகிறது. எந்தவிதமான பிரதி பலனுமின்றி எனக்காக அவர்கள் எடுத்துக் கொள்ளும் சிரமத்துக்கு என்னுடைய நன்றியையாவது இந்தச் சமயத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

தற்சமயம் தமிழ்நாடு இருக்கும் நிலையில் ஏற்கனவே ஒரு பிரபலப் பத்திரிகையில் வெளியான கதைகளைப் புத்தகமாக வெளியிடுவதற்கு அசாத்தியத் துணிச்சல் வேண்டும். அது மட்டும் இருந்தால் போதாது; அளவு கடந்த அன்பும் வேண்டும். அத்தகைய அன்பை என்மீது தொடர்ந்து செலுத்தி வரும் நண்பர்கள் —பிரசுராலயத்தின் நிர்வாகிகளுக்கும் என்னுடைய நன்றி உரியது.

நான் படிக்கும் உலகம் என்னும் புத்தகம் நாள்தோறும் எனக்குப் புதிய புதிய உண்மைகளை உணர்த்திக்கொண்டே இருக்க வேண்டுமென்று தம் முன்னுரையில் வாழ்த்தி வரங் கொடுத்திருக்கும் தமிழ்ப் பேராசிரியர் டாகடர் மு. வரதராசனார் அவர்களுக்கும் கடைசியாக என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொண்டு, நேயர்களிடமிருந்து இப்போதைக்கு விடை பெற்றுக் கொள்கிறேன்.

அன்பு,

சென்னை,
3-l-50

விந்தன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_உரிமை.pdf/10&oldid=1145531" இலிருந்து மீள்விக்கப்பட்டது