பக்கம்:ஒரே உரிமை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

ஒரே உரிமை

அவனுடைய எச்சில் சாதத்தைச் சாப்பிடுவது ‘பதிவிரதாதர்ம’ங்களில் ஒன்று என்று நினைக்கும் அப்பாவி மனைவி ஒருத்தி இருப்பாள். விருந்துக்கு வந்த வீட்டில் அம்மாதிரி யார் இருக்கிறார்கள் ? ஆகவே நான் அந்த இலையைத் தூக்கிக் கொண்டு, நாயைத் தேடிக் கொண்டு தெருவை நோக்கி நடையைக் கட்டினேன்.

எனக்கு எதிரே வந்த நண்பரின் மனைவி, “என்ன காரியம் செய்து விட்டீர்கள்! உங்களை யார் இலையை எடுக்கச் சொன்னார்கள்”? என்று பதட்டத்துடன் கேட்டாள்.

அன்னதானம் செய்வதிலுள்ள புண்ணியமனைத்தும் எச்சில் இலையை எடுத்துப் போடுவதில்தான் அடங்கியிருக்கிறது என்பது அந்த அம்மாளின் நம்பிக்கை. என்னுடைய செய்கையால் அந்த மகத்தான புண்ணியம் தனக்குக் கிடைக்காமல் போய் விட்டதே என்பதில்தான் அந்த அம்மாளுக்கு எவ்வளவு வருத்தம்!

உண்டுண்டுறங்குவதேயல்லாது வேறொன்றும் கண்டிலாத அடியார்’கள், தங்களுக்கு இயற்கையாயுள்ள சோம்பேறித்தனத்தால் புண்ணியத்தைச் சாக்காக வைத்துக் கொண்டு, எச்சில் இலையை எடுத்துப் போடும் வேலையைக் கூட அன்னதானம் செய்பவர்கள் தலையிலேயே கட்டிவிட்ட தந்திரத்தை அந்த அம்மாள் இந்த ‘அணுகுண்டு சகாப்’தத்தில் கூட அறியாமலிருந்தது எனக்கு ஆச்சரியமாய்த் தானிருந்தது.

என்னுடைய வியப்பை வெளியே காட்டி அந்த அம்மாளின் மனதைப் புண்படுத்த விரும்பாத நான், “பரவாயில்லை: இருக்கட்டும் அம்மா!” என்று சொல்லிச் சிரித்துக் கொண்டே தெருவுக்கு வந்தேன். என் கையிலிருந்த இலையைக் கண்டதும் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த இரண்டு ஜீவன்கள் என்னை நோக்கி ஓட்டமாய் ஓடி வந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_உரிமை.pdf/12&oldid=1148921" இலிருந்து மீள்விக்கப்பட்டது