பக்கம்:ஒரே உரிமை.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

நடக்காத கதை

முந்தி நம்மைத் தேடி நம்ம வீட்டுக்கு வந்து ஒரு நாளாவது பேசிவிட்டுப் போகாமல் இருந்திருப்பானா?—நீயே சொல்லு!

"ஐயோ! அதை ஏன் கேட்கிறே? இவன்தான் இப்படின்னா, இவன் பெண்டாட்டியிருக்காளே பெரியாத்தா, அவளுக்கு எம்மா 'ராங்கி'ங்கிறே? தீவாளிக்கு ஒரு பட்டுப் புடவை வாங்கிக் கொடுத்துட்டாலும் கொடுத்துட்டான், அவள் என்னமா ஒடிஞ்சி போறாங்கிறே?—அன்னிக்கு எதுக்கோ அவங்க வீட்டுக்குப் போயிருந்தேன்; நம்மபையனும் கூட வந்திருந்தான். அவங்க பெண்ணு திண்ணைமேலே வாங்கி தச்சிருந்த பட்டாசுக் கட்டை எடுத்துப் பார்த்துக்கிட்டு இருந்தது. நம்ம பையன் ஓடிப் போய் அந்தப் பெண்ணு கையிலேயிருந்த பட்டாசுக் கட்டை வாங்கிப் பார்த்தான். அதிலே என்ன தப்பு? அதைப் பார்த்ததும் அந்த ராங்கிக்காரி திடுதிடுன்னு என்னமா ஓடி வந்து 'வெடுக்' குன்னு பிடுங்கிக்கிட்டாங்கிறே? — எனக்கு ஆத்திரமா வந்திச்சு. நம்ம பையன் முதுகிலே நாலு அறை அறைஞ்சு உடனே கூட்டியாந்துட்டேன்!"

"அந்த நாய்ங்க வீட்டுக் கெல்லாம் நாம் போகவே படாதுங்கறேன்!—நீ பேசாம இரு: தர்மராஜா கோயில் உற்சவம்தான் நாளையோடு முடிஞ்சுபோவுதே?—இந்தப் பத்து ராத்திரியும் அம்மாம் பெரிய வெளக்கைத் தூக்கிக்கிட்டு நான் ஏன் தர்மராஜா சாமியோடு ஊரையெல்லாம் சுத்திச் சுத்தி வாரேன் தெரியுமா, காத்தாயி?—எல்லாம் உனக்காகத்தான்! தினம் தினம் கூலியைக்கூட வாங்கிக் கொள்ளாம ராவுத்தரை இல்லே சேர்த்து வைக்கச் சொல்லியிருக்கேன்? நாளைத் திருநாள் முடிஞ்சுதுன்னா, நாளன்றைக்குக் காலையிலே இந்தக் கையிலே முழுசா இருவது ரூவா இருக்கும். அப்புறம் நமக்கென்ன குறைவு, காத்தாயி? நம்ம வீட்டிலும் தீபாவளிதான்! அந்தப் பயல் பெண்டாட்டிக்குப் பட்டுப் புடவை எடுத்துக் கொடுத்தாக்கே, நான் உனக்கு ஒரு பருத்திப் புடவையாச்சும் எடுத்துக் கொடுக்கமாட்டேனா?" என்றான் கண்ணுச்சாமி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_உரிமை.pdf/122&oldid=1149427" இலிருந்து மீள்விக்கப்பட்டது