பக்கம்:ஒரே உரிமை.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122

நடக்காத கதை

பட்டம் பெற்றவர்கள். ஆகவே, அவர்கள்தான் எல்லோருக்கும் முன்னால் காட்சியளித்தனர்.

வாணவெடிகளும் வாத்திய கோஷங்களும் முழங்க, சுவாமி மாட வீதியைக் கடந்து தேர் வீதிக்குத் திரும்பிற்று.

ஐயோ! இதென்ன? அந்தத் தெரு முனையிலிருந்த எல்லைக் கல்லைக் கண்ணுச்சாமி ஏன் கவனிக்கவில்லை? அவனுடைய கால்கள் ஏன் அந்தக் கல்லுடன் மோதிக் கொண்டன? பாவம், அவன் தொபுகடீரென்று அப்படியா விழ வேண்டும்?

அவன் தலைமேலிருந்த 'காஸ் லைட்'...?

ஆயிரமாயிரம் சுக்கல்களாக வேண்டியதுதானே?

அப்படியானால் கழுத்து வவிக்க, கைகள் நோக, கால்கள் கடுக்க, கண்கள் எரிய, வியர்வை துளிர்க்க அவன் விடிய விடிய அந்தப் பத்து நாளும் பாடுபட்டதெல்லாம் வீண்தானா?

நாளைக் காலை பொழுது விடிந்ததும் குழந்தையைத் தூக்கித் தோளின் மேல் வைத்துக் கொண்டு, காத்தாயியுடன் கன குஷியாகக் கடைக்குச் செல்லலாம் என்று இருந்தானே!

இப்போது என்ன செய்வது? எப்படிச் சமாளிப்பது? அல்லாப் பிச்சை ராவுத்தர் இதற்கு என்ன செய்வார்?

சொல்வதென்ன?—இந்தப் பத்து நாளும் விளக்குத் தூக்கிய கூலி இருபது ரூபாயும் போக, மீதிக்கு "என்ன வழி?" என்று கேட்பார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_உரிமை.pdf/124&oldid=1149429" இலிருந்து மீள்விக்கப்பட்டது