பக்கம்:ஒரே உரிமை.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
என்ன பாவம் செய்தேன்?



னக்கு உலகம் இன்னதென்று ஒருவாறு தெரிந்த பிறகு, என் வாழ்க்கையின் முதல் அத்தியாயம் ஆரம்பமாயிற்று. அப்போதுதான் என் தந்தைக்குப் பாரமாயிருப்பதை நான் ஓரளவு உணர்ந்தேன்.

வேலையிலிருந்து வீடு திரும்பியதும், "ராஜினி, ராஜினி!" என்று இரைவார் என் அப்பா. அந்தக் குரலில் தேனின் இனிமையும் பாலின் சுவையும் கலந்திருப்பது போல் எனக்குத் தோன்றும்.

அக்கம் பக்கத்து வீடுகளில் என் அன்புக்குகந்த தோழர்—தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருக்கும் நான், அதைக் கேட்டு ஓடோடியும் வருவேன்.

அன்புடன் என் கன்னத்தைக் கிள்ளி, ஆசையுடன் என்னைத் தூக்கிக் கொண்டு, வீட்டுக்குள் நுழைவார் என் அப்பா.

அங்கே விதவிதமான பட்சண வகைகளெல்லாம் எனக்காகக் காத்துக் கொண்டிருக்கும். எல்லாம் எனக்கென்று என் அப்பா வாங்கி வந்தவைதான். அவற்றை யெல்லாம் ஒருவாறு தீர்த்துக் கட்டுவதற்கும், "காப்பி கூடச் சாப்பிடாமல் இத்தனை நாழி எங்கே போயிருந்தாயாம்?" என்று அம்மா என்னைச் செல்லமாகக் கடிந்த வண்ணம் காப்பி கொண்டு வருவதற்கும் சரியாயிருக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_உரிமை.pdf/129&oldid=1149434" இலிருந்து மீள்விக்கப்பட்டது