பக்கம்:ஒரே உரிமை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒரே உரிமை

11

அவற்றில் ஒன்று நாய்; இன்னொன்று பெயருக்கு ‘மனித’னாகப் பிறந்திருந்த சோலையப்பன்.

“சாமி, சாமி! அந்த இலையை இப்படிக் கொடுங்க, சாமி! கீழே போட்டுடாதீங்க, சாமி! என்று கெஞ்சினான் அவன்.

அவனுக்குப் பக்கத்திலே நாய் வாயைப் பிளந்து கொண்டு, நாக்கை நீட்டிக் கொண்டு, வாலை ஆட்டிக் கொண்டு, என்ன நன்றியுடன் பார்த்துக்கொண்டு நின்றது.

அந்த நாயைப்போலவே அவனும் என்னை நன்றியுடன் பார்த்தான்; வாயைத் திறந்தான்; நாக்கை நீட்டினன். ஆனால் ஒரே ஒரு வித்தியாசம்; நாய் வாலை ஆட்டிற்று; அவன் ஆட்டவில்லை! — அதுகூட அவன் குற்றமில்லை; பகவானின் குற்றம். ஏனெனில் அவனுக்கு வால் வைக்காமற்போன ‘கருணை’ அந்தக் ‘கருணைக் கட’லைச் சேர்ந்ததுதானே?

மனிதர்களுக்கு ஒரு விசித்திரமான மனோபாவம். என்னைப் போன்ற—அதாவது பணத்தைக் கொண்டு எந்த விதத்திலும் சாப்பாட்டுக்கு வசதி செய்து கொள்ளக் கூடியவர்களைக் கண்டால் அவர்கள் வருந்தி வருந்தி விருந்துக்கு அழைக்கிறார்கள்; மறுத்தால் அவர்களுக்குக் கோபம் கூட வந்துவிடுகிறது. ஆனால் இந்தச் ‘சோலையப்பன்கள்’— அதாவது பணத்தைக்கொண்டு எந்த விதத்திலும் சாப்பாட்டுக்கு வசதி செய்து கொள்ள முடியாதவர்கள்—வலுவில் வாசலுக்கு வந்து ஒரு கை சோறு கேட்டால் கூட எரிந்து விழுகிறார்கள்! — ஏன் இப்படி?

அவனைக் கண்ட மாத்திரத்தில் இப்படியெல்லாம் அலை மோதிய என் உள்ளத்தை ஒருவாறு அடக்கிக்கொண்டு, “மனிதனாகப் பிறந்த உனக்குக் கேவலம் இந்த எச்சில் இலைக்காக நாயுடன் போட்டியிடுவதற்கு வெட்கமாயில்லையா?” என்று கேட்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_உரிமை.pdf/13&oldid=1148922" இலிருந்து மீள்விக்கப்பட்டது