பக்கம்:ஒரே உரிமை.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128

என்ன பாவம் செய்தேன்?

அதையும் குடித்து வைத்த பிறகு, அம்மா என்னைத் தன் மனதுக்குப் பிடித்த மாதிரி அலங்காரம் செய்து வைப்பதில் முனைவாள்.

ஒரு நாளாவது எனக்கென்று ஏதும் செய்து கொள்ள என்னை விடுவதில்லை என் அம்மா. உயிரற்ற என் விளையாட்டுப் பொம்மைகளில் என்னையும் ஒன்றாக அவள் எண்ணி விட்டாளோ என்னமோ! இல்லையென்றால், என் முகத்தை நானே அலம்பிக் கொள்ளக் கூடவா அவள் என்னை விட மாட்டாள்?

அம்மாவின் லட்சணம்தான் இப்படியென்றால், அப்பாவின் லட்சணமாவது அதற்குக் கொஞ்சம் விரோதமாயிருக்கக் கூடாதோ? அதுவும் இல்லை. அவரிடம் நான் ஏதாவது என்னைப் பற்றிச் சொல்ல வாயெடுத்தால் போதும், "உனக்கெதற்கு, அந்தக் கவலையெல்லாம!" என்று கேட்டு, எல்லாக் கவலைகளையும் தன் தலையிலேயே போட்டுக் கொள்வார்.

"எதற்கும் நான் ஏதாவது ஒரு தொழிலுக்குப் படித்து வைக்கிறேனே, அப்பா!" என்றால், "குழந்தையும் குட்டியுமாகக் குடித்தனம் செய்வதைவிட, வேறு தொழில் உனக்கு என்னத்திற்கு?" என்று கேட்டு என் வாயை அடக்கி விடுவார்.

யோசித்துப் பார்த்தால், இப்போது நான் கொஞ்ச நஞ்சம் எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டிருக்கிறேனே, அதுகூட எனக்காக இல்லையென்று தோன்றுகிறது.

வேடிக்கையைத் தான் கேளுங்களேன்:

என்னைப் பள்ளிக்கூடத்தில் சேர்ப்பதற்காக என் அப்பா பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்த போது, "இந்தக் காலத்துப் படித்த பெண்களின் நடவடிக்கைகளைப் பார்த்தால், நம்ம ராஜினியை ஏன் படிக்க வைக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது!" என்றாள் அம்மா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_உரிமை.pdf/130&oldid=1149435" இலிருந்து மீள்விக்கப்பட்டது