பக்கம்:ஒரே உரிமை.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்ன பாவம் செய்தேன்?

133


போதிய பணம் மட்டும் இருந்திருந்தால், துன்பத்தை எதிர்த்து நின்று நாங்கள் ஓரளவு இன்பத்தை அடைந்திருக்கலாம் என்பது உண்மைதான். ஆனால், அதுதானே எங்களிடம் இல்லை?

***

ன் வாழ்க்கையின் இரண்டாம் அத்தியாயம் ஆரம்பமாகி எப்படியோ பத்து வருஷங்கள் கழிந்துவிட்டன. இனி மூன்றாம் அத்தியாயம் ஒன்றுதான் பாக்கியிருந்தது. அதாவது, முதலில் என் தந்தைக்குப் பாரமாயிருந்து, பின்னால் என் கணவருக்குப் பாரமாயிருந்த நான், இப்போது என மகனுக்குப் பாரமாக வேண்டும்.

இந்த மூன்றாவது அத்தியாயத்தோடு மற்ற பெண்களுடைய வாழ்க்கையைப் போல் என்னுடைய வாழ்க்கையும் முடிந்துவிடும். ஆனால் அதற்குரிய வயதை என் மகன் அடைய வேண்டியிருந்தது. அது வரை ஒன்று என் கணவர் உயிருடன் இருந்தாக வேண்டும்; இல்லையென்றால் நான் அவருக்கு முன்னால் இறந்துபோக வேண்டும்—இதுதானே நம்பாரத நாட்டுப் பெண்மணிகளுக்குப் பெரியோர் வகுத்துள்ள வழி?

வழி, நல்ல வழியாயிருக்கலாம். ஆனால் யமனுடைய ஒத்துழைப்பும் அல்லவா அதற்கு அவசியம் வேண்டியிருக்கிறது?

சின்னஞ் சிறு வயதிலே எத்தனையோ தாய்மார்கள், "மஞ்சள் குங்குமத்தோடு என்னை அவருக்கு முன்னால் கொண்டு போய்விடு, பகவானே!" என்று வேண்டிக் கொள்வதை நான் கேட்டிருக்கிறேன். அந்த வேண்டுகோளில் பொதிந்து கிடந்த பொருள் இப்பொழுதல்லவா எனக்குத் தெரிகிறது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_உரிமை.pdf/135&oldid=1149440" இலிருந்து மீள்விக்கப்பட்டது