பக்கம்:ஒரே உரிமை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அவள் என்னவானாள்?

21

“ஒன்று, நீங்கள் வேண்டும்; நீங்கள்தான் வேண்டும். இல்லை, காலன் வேண்டும்; காலன்தான் வேண்டும்!” என்று அன்று எழுதியவளா இன்று இப்படி எழுதினாள்?

என்னால் நம்பவே முடியவில்லையே!

***

நான் கடிதம் எழுதக் கூடிய ஒரு நிலையிலிருந்து, மனமுமிருந்து, சந்தர்ப்பமும் வாய்த்தால் எழுதுவேன்......” என்றால் என்ன அர்த்தம்?

“இல்லையென்றால் எழுதமாட்டேன்!” என்று தானே அர்த்தம்?

“நான் கடிதம் எழுதக்கூடிய ஒரு நிலையிலிருந்து......”

இதென்ன வார்த்தை? கடிதம் எழுதக் கூடிய நிலையில் இல்லாமல் வேறு எந்த நிலையில் அவள் இருக்கிறாளோ?

ஒரு வேளை வேறு யாரையாவது கல்யாணம் செய்து கொள்ளும் நிலையில் இருக்கிறாளோ?

அப்படி நினைப்பதற்கும் அவள் இடம் கொடுத்திருக்க வில்லையே!

ஒரு சமயம் அவள் ஒரு வார காலமோ இரண்டு வார காலமோ, ஏதோ ஓர் ஊருக்குப் போய்த் தங்கியிருக்க வேண்டிய அவசியம் நேர்ந்தது. அப்போது எனக்கு அவள் என்ன எழுதியிருந்தாள், தெரியுமா? “உங்களை விட்டுவிட்டு வேறு யாரையாவது கல்யாணம் செய்து கொண்டுவிட ஓடுகிறேனே என்று நீங்கள் தயவு செய்து நினைத்துவிட வேண்டாம், அம்மாதிரி ஒருநாளும் நடக்கவே நடக்காது!” என்றல்லவா எழுதியிருந்தாள்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_உரிமை.pdf/23&oldid=1148929" இலிருந்து மீள்விக்கப்பட்டது