பக்கம்:ஒரே உரிமை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

கதவு திறந்தது

பார்க்கப் போனால் அந்த முறையில் அறிமுகப்படுத்துவதற்குக் கூட அவன் அருகதையற்றவன். தொழிலாளிகளுக்காவது வேலை செய்வதற்கென்று ஓர் இடமுண்டு; அவர்களுடைய வேலைக்குக் கூலியும் இவ்வளவுதான் என்று நிச்சயமாக உண்டு; வசதியுடனோ, வசதியில்லாமலோ அவர்கள் வசிப்பதற்கென்று வாடகைக்காவது ஒரு சின்னஞ் சிறு அறை உண்டு; உணவும் உயிர் போகாமலிருப்பதற்காவது ஓரளவு உண்டு. ஆனால் அவனுக்கோ?

இந்த உலகத்தில் எதுவுமே நிச்சயமில்லை!

ஆம்; இந்த உலகத்தில் யாருக்குமே எதுவுமே நிச்சயமில்லைதான்; அப்படித்தான் வேதாந்திகள் சொல்லுகிறார்கள்.

ஆனால், அந்த வேதாந்திகள் தங்குவதற்கு மட்டும் சகல செளகரியங்களும் பொருந்திய எத்தனையோ மடங்கள் சர்வ நிச்சயமாக இருக்கின்றன; சாப்பாட்டு விஷயத்திலோ சாம்ராஜ்யாதிபதிகள் கூட அவர்களிடம் பிச்சை எடுக்கவேண்டும்!

இத்தனைக்கும் அத்தனை செளகரியமான வாழ்க்கைக்கு அவர்களுடைய உடலும் ஊனும் அணுவளவாவது தேய்வதில்லை; உள்ளம் நொந்து உயிரும் ஓரளவாவது ஒடுங்குவதில்லை.

மோட்ச சாம்ராஜ்யத்தில் தாங்கள் வகிக்கப் போகும் பதவிக்காக, முன் கூட்டியே அவர்களுக்குக் காணிக்கை என்ற பெயரால் லஞ்சம் கொடுத்துவைக்கும் மகானுபாவர்கள் எத்தனையோ பேர் இருக்கும்போது, அந்த வேதாந்திகளுக்கு இந்த அநித்தியமான உலகத்தில் எதைப் பற்றித்தான் என்ன கவலை?

ஆனால், மேற்கூறிய அந்தப் பரிதாப ஜீவனுக்கோ?—

எத்தனையோ கவலைகள்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_உரிமை.pdf/30&oldid=1148937" இலிருந்து மீள்விக்கப்பட்டது