பக்கம்:ஒரே உரிமை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

மாட்டுத் தொழுவம்

எவ்வளவுக் கெவ்வளவு படுத்துகிறாரோ, அவ்வளவுக்கவ்வளவு அவளுக்குத் திருப்தி! — அவளுடைய மனோபாவம் அப்படியிருக்கும்படியாக நான் அவளுக்கு என்ன தீங்கு செய்தேனோ, தெரியவில்லை.

இத்தனைக்கும் என்னுடைய கல்யாணத்திற்கு முன்னால் நான் யாரோ, அவள் யாரோ? ஏற்கனவே சேர்ந்து வாழ்ந்திருந்தாலும் ஏதாவது பழைய மனத்தாங்கல் இருப்பதற்குக் காரணமிருக்கலாம். இப்போதுதானே அவளை எனக்கும் என்னை அவளுக்கும் தெரியும்? அதற்குள் என்னிடம் ஏன் அவளுக்கு அத்தனை வெறுப்பு?

பார்க்கப் போனால் பிறக்கும்போதே அவள் மாமியாராகப் பிறந்துவிடவில்லை. ஒரு காலத்தில் அவளும் இன்னொரு மாமியாரின் கீழ் மருமகளாய்த்தான் வாழ்ந்திருக்க வேண்டும். இப்பொழுது என் உள்ளத்தில் தோன்றும் எண்ணங்கள் எல்லாம் அப்பொழுது அவள் உள்ளத்திலும் தோன்றியிருக்க வேண்டும்; நான் இன்று அனுபவிக்கும் கஷ்டத்தை அவளும் அன்று அனுபவித்திருக்க வேண்டும்; நான் அடையும் வேதனையை அவளும் அடைந்திருக்க வேண்டும்; நான் காணும் கனவுகளையெல்லாம் அவளும் கண்டிருக்க வேண்டும்; என்னைப் போல் இளமையின் ஆசைக் கடலில் வீழ்ந்து அவளும் ஒரு காலத்தில் தத்தளித்திருக்க வேண்டும்; துன்பத்தைக் கண்டு துடித்து, இன்பத்தை நினைத்து ஏங்கியிருக்க வேண்டும். ஆனால் இன்று காலம் மாறிவிட்டது. அவள் கடவுளைத் தவிர வேறு எதைப் பற்றியும் சிந்திக்க முடியாத நிலையில் இப்பொழுது இருக்கிறாள். இருந்து விட்டுப் போகட்டும். அதற்காக நானும் அவளைப் போல் ஜபமாலை உருட்டி வெறும் வேஷதாரியாக வேண்டுமா? வீட்டுக் காரியங்களைத் தவிர இந்த ஜன்மத்தில் எனக்கு வேறொன்றும் வேண்டாமா? இதற்குத்தான நான் இவளுடைய வீட்டுக்கு வந்தேன்? அப்படியானால் என்னுடைய பிறந்தகத்திலேயே எவ்வளவோ காரியங்கள் நான் செய்வதறகு இருக்கின்றனவே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_உரிமை.pdf/40&oldid=1148947" இலிருந்து மீள்விக்கப்பட்டது