பக்கம்:ஒரே உரிமை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



குழந்தையின் குதூகலம்


ன்றிரவு சங்கருக்குத் தூக்கமே பிடிக்கவில்லை. அவனுடைய நினைவெல்லாம் அன்று மாலை வாங்கிய ‘ஆடும் குதிரை’யின் மீதே இருந்தது. அதன்மீது தான் ஏறிக் கொண்டு ஆனந்தச் சவாரி செல்வது போலவும், அது ஆகாய வீதியெல்லாம் தூள் பறக்கப் பறந்து செல்வது போலவும் அவன் கற்பனை செய்து கொண்டிருந்தான்.

பொழுது விடிந்ததும் ஒரு விநாடிகூட அவனால் தாமதிக்க முடியவில்லை. இட்டிலியை மறந்தான். சட்டினியை மறந்தான். காப்பியைக்கூட மறந்து விட்டான். அந்த ஆடும் மரக்குதிரையை எடுத்துக் கொண்டு ஆட்டம் போடுவதற்காகத் தெருவுக்கு ஓடோடியும் வந்து விட்டான்.

தற்பெருமையடித்துக் கொள்வதில் பெரியவர்களுக்குத் தான் ஆசையென்பதில்லை; குழந்தைகளுக்கும் அது இருக்கத்தான் இருக்கிறது. இல்லையென்றால் அந்த ஆடும் குதிரையை வைத்துக்கொண்டு அவன் தன் வீட்டிலேயே ஆட்டம் போட்டிருக்கலாம். ஆனால் என்ன பிரயோசனம் அதனால்? அந்தக் குதிரை வாங்கிய வைபவத்தைப் பற்றி அவன் தன் நண்பர்களிடமெல்லாம் சொல்ல வேண்டியது எவ்வளவோ இருக்க, அதைத் தன் வீட்டுக் கூடத்திலேயே வைத்துக்கொண்டு ஆடினால் அவ்வளவு சுகப்படுமா? இல்லை, அதற்காக அவன் தன் நண்பர்களுடைய வீடுகளுக்கெல்லாம் சென்று அவர்களை வலுவில் அழைத்துக்கொண்டு வரத்தான் முடியுமா? தெருவுக்கு வந்துவிட்டால் அவர்கள் தாங்களாகவே கதறிக்கொண்டு வருகிறார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_உரிமை.pdf/48&oldid=1148958" இலிருந்து மீள்விக்கப்பட்டது