பக்கம்:ஒரே உரிமை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குழந்தையின் குதூகலம்

47

சங்கர் எதிர்பார்த்தது வீண் போகவில்லை. அந்தக் குதிரையின் மீது ஏறி அவன் ‘ஹை, ஹை’ என்று ஓர் ஆட்டம் போட்டதுதான் தாமதம், அப்பொழுதுதான் படுக்கையை விட்டு எழுந்த எதிர் வீட்டு மணி பறந்தோடி வந்தான்,

“டேய், சங்கர்! ஏதுடா, உனக்கு இந்தக் குதிரை? யார் வாங்கிக் கொடுத்தது?” என்று அவன் சங்கர் எதிர்பார்த்தபடியே ஆவலுடன் கேட்டும் வைத்தான்.

“என் அப்பா வாங்கிக்கொடுத்தார்!” என்று சங்கர் ஒரே வார்த்தையில் பதில் சொல்லிவிட்டுப் போயிருக்கலாம். ஆனால் விஷயத்தை அவ்வளவு சீக்கிரத்தில் முடித்து விட அவனுக்கு விருப்பமில்லை. கொஞ்சம் ஆதியோடந்தமாகவே ஆரம்பித்தான்.

“நேற்ற ஞாயிற்றுக் கிழமையோ இல்லையோ, என் அப்பாவுக்கு ஆபீஸ் கிடையாது. நான், என் அம்மா, அப்பா எல்லோரும் மத்தியானம் சாப்பிட்டானதும் சினிமாவுக்குப் போனோம்......”

“என்ன, சினிமாவா! அதென்னடா, சினிமா?”

சங்கருக்குச் சிரிப்பு வந்தது. “என்னடா சுத்தப் பட்டிக் காட்டு ஆசாமியாயிருக்கிறாயே? உனக்கு சினிமாவென்றாலே இன்னதென்று தெரியாதா?” என்று கேட்டான்.

“தெரியாதுடா!” என்றான் மணி, முகத்தைத் தொங்கவிட்டுக் கொண்டு.

“அட நிஜமாவா!” என்று மீண்டும் கேட்டான் சங்கர். அவனால் நம்பமுடியவில்லை.

“நிஜமாத்தாண்டா!” என்றான் மணி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_உரிமை.pdf/49&oldid=1148960" இலிருந்து மீள்விக்கப்பட்டது