பக்கம்:ஒரே உரிமை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

குழந்தையின் குதூகலம்

“போடா மண்டு! ‘பீச்’சுக்கு எதற்காகப் போவார்கள்?” என்று எரிந்து விழுந்தான் சங்கர்.

“எதற்காகப் போவார்கள்?” என்று மணி அவனையே மீண்டும் திருப்பிக் கேட்டான்!

“காற்று வாங்குவதற்குத்தான்!”

“ஏன், இங்கெல்லாம் கூடத்தானே காற்று அடிக்கிறது?”

“அங்கே அடிக்கும் காற்றின் சுகமே வேறேடா! இதோ பார், மேலே நீல வானம் இருக்கோ, இல்லையோ? அதே மாதிரி அங்கே ஒரு நீலக் கடல் இருக்கு. அதிலேயிருந்து ஜலம் அலைமேல் அலையாக் கிளம்பி, முத்துக்கள தெறித்தாற் போலக் கரையிலே வந்து மோதும். அது பார்ப்பதற்கு எவ்வளவு அழகாயிருக்கும், தெரியுமா?”

“அதைப் பார்க்கக்கூடக் காசு கொடுக்கவேணுமாடா?”

“இல்லையடா, இல்லை! யாரு வேணுமானாலும் போய்ப் பார்க்கலாம்!”

மணியின் முகம் மலர்ந்தது. “அப்படியானால் நாளைக்கே தன்னை ‘பீச்’சுக்குக் கூட்டிக்கொண்டு போகும்படி அப்பாவை ஏன் கேட்கக் கூடாது?” என்று எண்ணிக் கொண்டான்.

ஆனால், அதற்கு அடுத்த கணமே அவனுடைய முகம் சுருங்கிவிட்டது. ஏனெனில் அந்தப் ‘பாழும் அப்பா’ யார் என்று அவனுக்கு இது நாளது வரை தெரியவே தெரியாது. இத்தனைக்கும் அந்த மனிதன் இன்னும் செத்துப் போகவும் இல்லை!

அம்மாவைக் கேட்டாலோ, அவள் நாளுக்கு ஒரு விதமாகப் பதில் சொல்கிறாள். அவன் என்ன செய்வது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_உரிமை.pdf/52&oldid=1148963" இலிருந்து மீள்விக்கப்பட்டது