பக்கம்:ஒரே உரிமை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மனக் குறை

59

கொண்டு சும்மா உட்கார்ந்திருக்கும் நான் சாயந்திரமானால் சிங்காரித்துக் கொண்டு குயில் மாதிரி கொஞ்சிக்கொண்டும் மயில் மாதிரி நடைபோட்டுக் கொண்டும் உங்கள் முன்னால் வந்து நிற்க வேண்டியதுதான்!– அப்படித்தான் நீங்கள் விதம்விதமான துணி மணிகள் எடுத்துப் பீரோ நிறைய அடுக்கி வைத்திருப்பது என்ன கெட்டுப் போச்சு? மாற்றிக் கட்டிக்கொள்ள மறு புடவைக்கு வழி கிடையாதே!” என்று குமுதமும் பதிலுக்கு எரிந்து விழுந்து கொண்டே, கையிலிருந்த பத்திரிகையை அவன்மேல் வீசி எறிந்துவிட்டு, அடுப்பங்கரையை நோக்கி நடந்தாள்.

அங்கே, அவளுடைய எட்டு வயதுப் பெண்ணான பட்டு இராத்திரிச் சாப்பாட்டிற்காகப் பொரித்து வைத்திருந்த அப்பளங்களில் ஒன்றை எடுத்துச் சுவை பார்த்துக் கொண்டிருந்தாள். அந்தச் சாக்கில் அவளுடைய முதுகில் இரண்டு அறை வைத்துத் தன்னுடைய கோபத்தைத் தீர்த்துக் கொண்டாள் குமுதம்.

அதே சமயத்தில், வெளியே விளையாடிக் கொண்டிருந்த பட்டுவின் தம்பியான கிட்டு உள்ளே நுழைந்தான். அவன் சட்டையெல்லாம் ஒரே புழுதி மயமாக இருந்தது. அதைச் சாக்காக வைத்துக்கொண்டு அவனுடைய காதைத் திருகியதன் மூலம் தன்னுடைய ஆத்திரத்தைத் தீர்த்துக் கொண்டான் நாராயணமூர்த்தி.

பட்டுவும் கிட்டுவும் அழுது கொண்டே வெளியே வந்து வீட்டு வாசற்படியில் உட்கார்ந்தனர்.

சிறிது நேரத்திற்குப் பிறகு, “அக்கா, அம்மா உன்னை ஏன் அடிச்சா?” என்று கேட்டான் கிட்டு.

“ஒரு அப்பளத்தை எடுத்துத் தின்று விட்டேனாம், அதற்காக!” என்றாள் பட்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_உரிமை.pdf/61&oldid=1148978" இலிருந்து மீள்விக்கப்பட்டது