பக்கம்:ஒரே உரிமை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மனக் குறை

65

மானால் பொழுது போவது சிரமமாயிருக்கிறது’ என்று அவரிடம் ஒரு வார்த்தை சொன்னேன். அதற்காக இந்த ரேடியோவை வாங்கி வைத்திருக்கிறார்!” என்றான் ஹரி பெருமையுடன்.

இதைக் கேட்டதும் எரிகிற தீயில் எண்ணெய் விட்டது போலிருந்தது நாராயணமூர்த்திக்கு. ஆனாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், வந்த காரியத்தை முடித்துக் கொண்டு தன் வீட்டுக்குப் புறப்பட்டு விட்டான்.

***

ந்தச் சம்பவம் நடந்த இரண்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு, ஒரு நாள் காலையில் பஸ்ஸுக்காகக் காத்துக் கொண்டிருந்தான் நாராயணமூர்த்தி, “நோ, ரூம், நோ, ரூம்!” என்ற கண்டக்டர்களின் ஓயாத ஓலத்தைக் கேட்டுக் கேட்டு அலுத்துப்போன சமயத்தில், ‘திடுதிப்’பென்று மோட்டார் சைக்கிளில் வந்து அவனுக்கு முன்னால் நின்ற ஹரிகிருஷ்ணன், “என்ன, நாராயணமூர்த்தி! பஸ்ஸுக்காகவா காத்துக் கொண்டிருக்கிறாய்?” என்று அனுதாபத்துடன் கேட்டான்.

“ஆமாம்” என்று சொல்லக்கூட வாயடைத்துப்போய், அவனையும் அவன் ஏறி வந்த புத்தம்புது மோட்டார் சைக்கிளையும் ஏற இறங்கப் பார்த்தான் நாராயணமூர்த்தி.

“என்ன, பார்க்கிறாய்? உன்னைப் போல்தான் நானும் தினசரி இந்தப் பாழாய்ப்போன பஸ்ஸுக்காகக் காத்துக் காத்துப் பார்த்துப் போதும் போதும் என்று ஆகிவிட்டது. கடைசியில் என் மாமனார்தான் இந்த மோட்டார் சைக்கிளை வாங்கிக் கொடுத்து, என்னுடைய கஷ்டத்தைத் தீர்த்து வைத்தார்!” என்றான் ஹரி.

“என்ன இருந்தாலும் நீ கொடுத்து வைத்தவன்தான்!” என்றான் நாரயணமூர்த்தி தன்னையும் மீறி வந்த வயிற்றெரிச்சலுடன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_உரிமை.pdf/67&oldid=1149876" இலிருந்து மீள்விக்கப்பட்டது