பக்கம்:ஒரே உரிமை.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தேற்றுவார் யார்?

75

அடைத்துவிட்ட அரிச்சந்திரனைப் போல ஏழை அம்மாயி சந்தோஷமடைந்தாள்.

இந்த உண்மை அந்த அம்மாளுக்குத் தெரியவில்லை. அவள் அலட்சியமாகத் தன் வாக்குறுதியை மீறி, “டஜன் ஆறணாவுக்குக் கொடுக்கமாட்டாயா?” என்று கேட்டாள்.

“என்ன, அம்மா! வேறே விலை கேட்க மாட்டேன்னு சொல்லிவிட்டு இப்படிக் கேட்கிறீங்களே?” என்று சொல்லிக்கொண்டே, அம்மாயி கூடையைத் தூக்கி மீண்டும் தலையில் வைத்துக்கொண்டாள்.

“முதல் முதல்லே ‘போனி’ பண்ணுவாங்கன்னு பார்த்தா, அந்த அம்மா இப்படிக் கேட்டுவிட்டாங்களே! அதுக்காக நஷ்டத்துக்குப் போனி பண்ண முடியுமா?” என்று தனக்குள் முணுமுணுத்துக்கொண்டாள் அம்மாயி,

மீண்டும் இன்னொரு இடத்திலிருந்து அழைப்பு!– போனாள்.

“டஜன் என்ன விலை?”

இந்தத் தடவை அவள் அரிச்சந்திரனைப் பின்பற்ற விரும்பவில்லை. “ஒண்ணரை ரூபாயுங்க!” என்றாள்.

“முக்கால் ரூபாய் கொடுப்பாயா?” என்று கொஞ்சங் கூடக் கூசாமல் கேட்டார் அந்த ஆசாமி.

“சரி, எடுங்கோ! முதல் முதல்லே போனி பண்ணுங்கோ!” என்றாள் அம்மாயி.

அந்த மனிதர் கால் டஜன் பழங்களை எடுத்துக்கொண்டு மூன்றணுவை எடுத்து அவளிடம் கொடுத்தார். அதைப் பெற்றுக்கொண்டு திரும்பியபோது அவளுக்கு எதிரே ஒரு பலூன்காரன் வந்தான். “அப்புறம் மறந்து விட்டாலும் மறந்து விடுவோம். குழந்தைகள் ஏமாந்து போகும்!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_உரிமை.pdf/77&oldid=1149013" இலிருந்து மீள்விக்கப்பட்டது