பக்கம்:ஒரே உரிமை.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கைமேல் பலன்

83

அன்று மத்தியானம் 'அலைந்தது மிச்சம்' என்று அய்யர் வீட்டுச் சோற்றை எதிர்பார்த்தவனாய்ச் சின்னப்பன் சீக்கிரமாகவே வீட்டுக்கு வந்து விட்டான் வந்தவன் தட்டியை அவிழ்க்கவும் இல்லை; குடிசைக்குள் நுழையவுமில்லை, வாசலிலேயே நின்று அவளுடைய வரவை ஆவலுடன் எதிர்பார்த்து நின்றான்.

நின்றான், நின்றான், நின்றான்—நின்று கொண்டேயிருந்தான்.

சிறிது நேரத்துக்கெல்லாம் அவள் சற்றுத் தூரத்தில் வருவது தெரிந்தது: அவளைக் கண்டதும் அவன் முகம் மலர்ந்தது சூரியனைக் கண்ட தாமரையைப் போல அல்ல; சோற்றைக் கண்ட ஏழையைப் போல.

அவள் அருகில் வந்தாள்: அவன் முகம் குவிந்தது!

ஏன் தெரியுமா?—இத்தனை நாளும் அவளுடைய முகத்தில் ஒருவிதக் களை இருக்குமே, அந்தக் களையை இன்று காணவில்லை; இத்தனை நாளும் அவளுடைய கையில் சாதம் இருக்குமே, அந்தச் சாதத்தையும் இன்று காணவில்லை!

"இன்னிக்குத் திடீரென்று அய்யர் வீட்டுக்கு ரெண்டு விருந்தாளிங்க வந்துட்டாங்க, அதாலே ஒண்ணும் கிடைக்கலே!" என்று சொல்லி வருத்தத்துடன் கையை விரித்தாள் செல்லம்.

"அதுக்குத்தான் என்ன பண்றது! தண்ணீர் இருக்கவே இருக்கு; யார் வீட்டுக்கு எத்தனை விருந்தாளிங்க வந்தாலும் நம்மை அது தாங்குமில்லே!" என்று சொல்லி, ஒரு வறட்டு சிரிப்புச் சிரித்தான் சின்னப்பன்.

"அப்படின்னா நான் வாரேன்! ஏகப்பட்ட துணிங்க இருக்கு; தோய்ச்சுப் போடணும்!" என்று சொல்லிவிட்டுத் திரும்பினாள் செல்லம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_உரிமை.pdf/85&oldid=1149340" இலிருந்து மீள்விக்கப்பட்டது