பக்கம்:ஒரே உரிமை.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

கருவேப்பிலைக்காரி

விட்டு அவரு ஜெயிலுக்குப் போயிடுவாரு. 'மவராசனுங்க அவரை எப்பவும் அப்படியே ஜெயில்லே வச்சிருக்க மாட்டானுங்களா!'ன்னு எனக்குத் தோணும். ஏன்னா, அந்த மனுசன் வூட்டிலேயிருந்தா எனக்குக் கொஞ்சங்கூடச் சந்தோசமே கெடையாது. அவரு இல்லாதப் போதாவது இந்தக் கறிப்பிலை வித்துக் கெடைக்கும் அரிசியைக் கஞ்சி காய்ச்சி வயிறாரக் குடிப்பேன். அவரு இருந்தா எல்லா அரிசியையும் வித்துக் காசை அவருக்குச் சூதாடக் கொடுத்துடணும், இல்லாவிட்டா அடிச்சுக் கொன்னுப்பிடுவாரு! அதுவும் சீக்கிரம் சீக்கிரமா! எல்லாத்தையும் அவருகிட்ட குடுத்துட்டு நானும் குழந்தையும் பட்டினி கெடக்க முடியுமா? அதாலே, அவருக்குத் தெரியாம இந்த முந்தானையிலே கொஞ்சம் அரிசி முடிஞ்சி வச்சுக்கிட்டுத்தான் நான் பாக்கியை விப்பேன். வித்த காசை அந்தக் கட்டையிலே போறவன் கையிலே கொடுத்துட்டு, 'கடவுளே!'ன்னு குடிசைக்கு வருவேன். முந்தானையிலே முடிஞ்ச அரிசியை அவிழ்த்து எடுத்துக் கஞ்சி காய்ச்சி, நான் கொஞ்சம் குடிச்சிப்பிட்டு—இந்தக் கொழந்தைக்கும் ரெண்டு பாலாடை ஊத்திப்பிட்டு—அந்த மனுசனுக்கும் கொஞ்சம் எடுத்து வச்சிருப்பேன்......"

"அப்படிப்பட்டவனுக்கு நீ ஏண்டி அந்தக் கஞ்சியிலே கொஞ்சம் மீத்தி வைக்கிறே? எல்லாவற்றையும் குடித்து விட்டு, வெறும் பானையை அவனுக்கு முன்னால் உருட்டி விடுகிறதுதானே?"

"நல்லாச் சொன்னே, அம்மா! அப்படிச் செஞ்சா அந்தப் பானை ஆயிரஞ் சுக்கலாப் போகும்; அத்தோட என் தலையும் ஆயிரஞ் சுக்கலாப் போகும். அதுவும் இல்லாம, 'ஏண்டி சோறு ஆக்கலே?'ன்னு என்னமோ கொண்டாந்து குடுத்தவன் மாதிரி ஏக அதிகாரமாக் கேட்டு என்னை ஒதை ஒதைன்னு ஒதைச்சுத் தொலைச்சுப்பிடுவாரு!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_உரிமை.pdf/98&oldid=1149368" இலிருந்து மீள்விக்கப்பட்டது