பக்கம்:ஒரே உரிமை.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கருவேப்பிலைக்காரி

97


"நல்ல கதை தாண்டி, உன் கதை! அவன்தான் வீட்டிலே சும்மா உட்கார்ந்து கொண்டிருக்கிறானே, இந்தக் குழந்தையை நீ ஏன் முதுகிலே சுமந்து கொண்டு திரிய வேண்டும்? அவனிடம் இதை விட்டு விட்டு வரக் கூடாதோ?"

"அதுக்குக்கூட அவரு ஒப்ப மாட்டாரு, அம்மா! அந்தக் கொழந்தையைத் தூக்கி வைத்துக்கொள்ள முடியாம அப்படி என்னடி நீ வேலை செஞ்சு கிழிச்சுப் பிடுறே?’ன்னு எரிஞ்சு விழுவாரு, அம்மா!"

"அந்த 'அவரு' மட்டும் என்ன செய்து கிழித்து விடுகிறாராம்!" என்று கேட்டேன் நான்.

"என்ன இருந்தாலும் அவரு என்னைத் தொட்டுத் தாலி கட்டின புருசன்! அப்படி யெல்லாம் நான் அவரை எதிர்ச்சிக் கேட்கலாமா, அம்மா?"

"அடி, பைத்தியக்காரி! உன்னைப் பற்றி அவன் நன்றாய்த் தெரிந்துகொண்டுதான் அப்படி மிரட்டு மிரட்டு என்று மிரட்டுகிறான்! எங்களவர் இருக்கிறாரே, அவர் என்னை அப்படிக் கேட்டால் நான் என்ன செய்வேன், தெரியுமா? பிய்த்துப் பிரி கட்டிவிட மாட்டேனா?"

"உங்களோடு என்னையும் சேர்த்துப் பேச முடியுமா, அம்மா?"

"சரி சரி, இந்தா அரிசி—நீ கருவேப்பிலை போடு!" என்று அலுத்துக்கொண்டே நான் அரிசியை அவள் நீட்டிய மூங்கில் தட்டில் கொட்டினேன். அதைப் பெற்றுக் கொண்டு அவளும் கொடுக்க வேண்டியதைக் கொடுத்து விட்டுச் சென்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_உரிமை.pdf/99&oldid=1149369" இலிருந்து மீள்விக்கப்பட்டது