உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒலிம்பிக் பந்தயத்தின் கதை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11

என்பதை நாம் அறியலாம். கிரேக்கர்கள் இயற்கையின் அழகைப் புகழ்ந்தனர் போற்றினர். பக்தியுடன் வணங்கினர். இயற்கையின் வடிவிலே இறை உருவை அமைத்தனர். இயற்கை வழி இயங்கும் இறைவன் நினைவைத், தாங்கும் உடலை, உள்ளத்தை, வலிமையோடும் திறமை யோடும் வைத்திருக்கும் வாழ்வைத் தொடங்கினர்--தொடர்ந்தனர். அதன் காரணமாகவே, உடலைப் பேணும் உயர்ந்த நெறியைக் காத்தனர்.

நம் நாட்டு சித்தர் திருமூலர் கூறிய கருத்தின் படியே அவர்கள் வாழ்ந்திருக்கின்றனர்.

அதாவது,

"உடம்பின் உள்ளே உத்தமன் கோயில் கொண்டான் என
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே.”

என்பது போல.

இதய நிலை மட்டும் அப்படி அவர்களுக்கு அமையவில்லை. இயற்கைச் சூழ்நிலையும் அவ்வாறுதான் அமைந்திருந்தது. கிரேக்க நாட்டைச் சுற்றிலும் உள்ள நாடுகள் அனைத்தும், தாங்களே தலைமை ஏற்று மற்ற நாடுகளை ஆள வேண்டும் என்று விரும்பின பிறரை ஆளவேண்டும் என்றால் அடக்குமுறைதானே முன்னே எழும் ! ஆசை ஆவேசத்தைத் தூண்டிவிட்டது

விருப்பத்தை நிறைவேற்ற, எல்லா நாடுகளும், போரையே சரண்புகுந்தன. போருக்குத் தேவை படைக் கலன்கள் என்றாலும், படைக்கலன்களைப் பயன்படுத்த பலமான உடலும் தேவையன்றோ ! இக்காலம் போல பீரங்கியும் வெடிகுண்டும், விமானத் தாக்குதலும் அக். காலத்தில் இல்லையே!