பக்கம்:ஒளிபடைத்த கண்ணினாய் வா வா.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

பூவை எஸ். ஆறுமுகம்


தலைமை ஆசிரியர் வரச் சொன்னார் என்று கேட்டதும் முகுந்தனுக்குப் பயம் அதிகரித்தது. நான் ஒரு தவறும் செய்யவில்லை. என்னை ஏன் வரச் சொன்னார்? எந்தப் பையனாவது தவறு செய்து விட்டு என் மீது பழியைச் சுமத்தி விட்டானா? என்று நினைத்துத் தயங்கி நின்றான்.

“என்னடா முகுந்தா! இன்னும் ஏன் நிற்கிறே? சீக்கிரம் போ. அவர் வகுப்பிற்குப் போகப் போகிறார். உம்; போ” என்று துரிதப்படுத்தினார் ஆசிரியர்.

முகுந்தன் பயந்து மெதுவாக நடந்து சென்றான். தலைமை ஆசிரியர் தன் அறையை விட்டு வெளியில் வந்தார். முகுந்தனைப் பார்த்தார். சின்னஞ்சிறிய உருவம். கள்ளங்கபடம் அறியாத முகம்.

“முகுந்தா! வா” என்று அழைத்தார் தலைமை ஆசிரியர்.

முகுந்தன் தயங்கியவாறு நடந்து சென்றான். தலைமை ஆசிரியர் அவனை அணைத்துக் கொண்டு முதுகில் தட்டிக் கொடுத்தார். “நீ வகுப்பில் நன்றாகப் படிக்கிறாயா?’ என்று கேட்டார்.

நன்றாகப் படிக்கிறேன் என்று வாயால் சொல்லாமல் தலையை அசைத்தான்.