பக்கம்:ஒளிபடைத்த கண்ணினாய் வா வா.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒளி படைத்த கண்ணினாய் வா! வா!

9

காந்திராமன், “வாப்பா!” என்று நேருவை வரவேற்றார், “அப்படி உட்கார்ந்து, அந்த இட்டிலி தோசையைச் சாப்பிடு,” என்றார்.

பிஞ்சு நெஞ்சு தழுதழுக்காமல் இருக்குமா?— "ஐயா!...அன்பு எதையும் கேட்காது; கொடுக்கத்தான் செய்யும்னு காந்திமகாத்மா சொன்னது சத்தியமான வாக்குத்தானுங்க!” என்றான்.

காந்திராமன் வாய் கொள்ளாமல் சிரித்தார்; “அந்தப் பொன்மொழி எனக்கும் தெரியுமே!” என்றார்.

நேருவுக்கு ஐந்தே ஐந்து நிமிஷத்திலே பசி பறந்து விட்டதே!

“நேரு உன் லெட்டரைப் படிச்சேன்! படிக்க வேண்டிய இந்தச் சின்ன வயசிலே, படிப்பை விட்டுட்டு நீ எடுபிடி வேலைக்குப் போய் உன்னைப் பெற்றவங்களுக்கு நீ படி அளக்கப் போறியா?...உன்னோட இந்த முடிவை என்னாலே அனுமதிக்க முடியாது! உங்க குடும்பத்தை நல்ல படியாகக் கட்டிக் காப்பாற்றவேண்டியது உன் அப்பாவோட கடமையாகும். இளைய பாரதத்தினன் உன்மாதிரி நெஞ்சில் உரமும் நேர்மைத் திறமும் கொண்ட கெட்டிக்காரப் பையனை இழக்க இந்தப் பள்ளி விரும்பாது சரி; நீ போகலாம்!”