பக்கம்:ஒளிபடைத்த கண்ணினாய் வா வா.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒளி படைத்த கண்ணினாய் வா! வா!

13

நீதி, தருமம் மற்றும் சத்தியத்தின் நெறி முறை முதலான நியதிகளையும் விதிகளையும் யதார்த்தமான இலக்கோடும் இலட்சியத்தோடும் நீதிக் கதைகள் வழங்கவும் செய்கின்றன.

உண்மைதான்! வாழ்க்கை வாழ்வதற்குத்தான்! வாழ்வதற்காக வாழும் வாழ்க்கைக்கு வளமும் வனப்பும்சேர்ப்பதில் நீதியும், தர்மமும், உண்மையும் சத்தியமும் மகத்தான பங்கேற்கின்றன. மாண்புமிக்க இத்தகைய குண நலன்கள் ஒன்றில் ஒன்றாகவும், ஒன்றோடு ஒன்றாகவும் இணைந்தும் பிணைந்தும் இருக்கின்றன அல்லவா?

நீதி காத்த தருமத்தின் சுவையான நீதிக்கதை ஒன்றைச் சொல்லுவேன்; கேளுங்கள்.

அன்றைக்கென்று சூரிய பகவானுக்கு அப்படி என்னதான் கோபமோ?

வெயில் சூடேறிக் காய்ந்தது.

ராமையா வியர்க்க விறுவிறுக்கப் பதற்றத்தோடு கம்பெனிக்குள் நுழைந்தார்.

பழைய டயர்களைப் புதுப்பிக்கும் கம்பெனி அது.

வேலையாட்கள் பொறுப்போடு பணி செய்து கொண்டிருந்தனர்.