பக்கம்:ஒளிபடைத்த கண்ணினாய் வா வா.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

பூவை எஸ். ஆறுமுகம்

தெருவழியே, அப்போது பையும் கையுமாக வீடு நோக்கிப் போய்க்கொண்டிருந்தான் அதிசயம்!—மாஸ்டர் அதிசயம்!

ராமையா திகைப்படைந்தார்; அதிர்ச்சியும் அடைந்தார். பை நிரம்பச் சாமான்கள் வாங்குவதற்கு அவ்வளவு பணம் அதிசயத்திடம் ஏது? அன்றைக்கான தினக்கூலியான ஐந்து ரூபாயைக் கூட அவன் சாயந்தரம்தானே வாங்கிக் கொள்ள முடியும்? —எச்சில் இலையை வீசிவிட்டு, “அதிசயம்!...அதிசயம்!” என்று சத்தம் போட்டுக் கூப்பிட்டார் ராமையா. அவன் — சிறுவன் அதிசயம் திரும்பியே பார்க்காமல் விரைந்ததை உணர்ந்ததும், ஓட்டமும் நடையுமாகச் சென்றார் அவர். அவன் தோள்மீது கை வைத்ததும் திரும்பிப் பார்த்த அதிசயத்தைக் கம்பெனிக்கு அழைத்துச் சென்றார். வீட்டுச் சாமான்கள் வாங்க அவனுக்கு ஏது பணமென்று அவனிடம் கேட்டார். பக்கத்து விட்டுச் சோமையாவிடம் ஐம்பது ரூபாய் கடன் வாங்கியதாகவும் அதைக் கொண்டுதான் சாமான்களும் அம்மாவுக்கு மாத்திரைகளும் வாங்கியதாகவும் அதிசயம் சொன்னதை நம்பாமல், வேறொரு வேலையாளை அழைத்து சோமையாவைக் கூட்டிக் கொண்டுவரும்படி கூறினார் நிர்வாகி ராமையா.

அவ்வளவுதான்!